உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராத்: பாக். முன்னாள் கேப்டன் சர்டிபிகேட்!
உலகின் சிறந்த பேட்ஸ்மேன், விராத் கோலிதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுடன் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபார சதமடித்த விராத் கோலி, 160 ரன்கள் குவித்தார். இதையடுத்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மியான் தத் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ’கோலியின் வலுவான பேட்டிங் டெக்னிக்கும் திறமையும் இக்கட்டான நிலையில் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து வருகிறது.
ஒரு பேட்ஸ்மேனின் டெக்னிக் மோசமாக இருந்தால் ஒரு சில போட்டிகளில் அதிக ரன் குவிக்கலாம். ஆனால் கோலியின் டெக்னிக் வேறு. அவர் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். பந்துவீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அவர் உடனடியாக அறிந்துகொள்கிறார். அவர் ஜீனியஸ். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான்’ என்று தெரிவித்துள்ளார்.