வீரர்கள் தேர்வில் தொடர்ந்து சொதப்புகிறாரா விராட் கோலி !
சமீப காலங்களாக விராட் கோலியின் அணி தேர்வு சரியாக எடுபடுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. உதராணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றப்பட்டனர். அவர்களின் மாற்றம் அணியின் பந்துவீச்சில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் தொடரில் இரண்டாவது போட்டி தவிர மற்ற போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக தான் இருந்தது. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலியே இதுகுறித்து ஒப்புக்கொண்டுள்ளார். அதில் அவர் ஆடுகளத்தின் தன்மையையும் மற்றும் பனிப்பொழிவையும் நாங்கள் சரியாக கணிக்கவில்லை என்று கோலியே கூறியிருந்தார்.
அதேபோல இன்று நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியிலும் விராட் கோலி பெங்களூரூ அணியில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்துள்ளார். பொதுவாக சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு தான் சாதகமாக இருக்கும். இன்றும் மைதானத்தில் பந்து குறைவான வேகத்தில் எழும்பி அத்துடன் நல்ல டர்ன் ஆனது. ஆனால் பெங்களூரூ அணி அதை உபயோகப் படுத்த ஏதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. அதேசமயம் சென்னை அணியின் கேப்டன் தோனி மைதானத்தின் தன்மையை நன்கு கணித்து 3 முக்கிய சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளிடோர் தேர்வு செய்தார்.
இதனை வைத்து பார்க்கும் போது விராட் கோலி தனது அணி தேர்வு மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டவேண்டும் என்றே தெரிகிறது. இதனால் உலகக் கோப்பைக்கு முன் விராட் கோலி இதனை சரி செய்து கொண்டால் உலகக் கோப்பையில் இந்திய அணி எளிதாக வெல்ல முடியும் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.