இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தர வரிசையில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விராத் கோலி சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவரை முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 0, 13, 12, 15 என சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து, ஐசிசி பேட்டிங் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா தனது ஆறாவது இடத்தை தக்கவைத்துள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நான்காம் இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசியின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றனர்.
மேலும், ரவிசந்திரன் அஸ்வின் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். 403 புள்ளிகளை வைத்திருந்த வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசனை முந்தி 434 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் அஸ்வின்.