"விரைவில் ஐசிசி கோப்பைகள் கோலியின் வசமாகும்" - சுரேஷ் ரெய்னா
ஐசிசி கோப்பைகளை விரைவில் இந்திய கேப்டன் விராட் கோலி நிச்சயம் வாங்குவார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
News24 Sports இணையதளத்துக்கு பேசிய சுரேஷ் ரெய்னா "கோலிதான் நம்பர் ஒன் கேப்டன். அவருடைய சாதனைகள் அதை உறுதி செய்கின்றன. மேலும் கிரிக்கெட் உலகத்தின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனும் கோலிதான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. கோலி இன்னமும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வாங்கவில்லை என கூறுகிறீர்கள். ஆனால் அவர் இன்னும் ஐபிஎல் கோப்பையை கூட வாங்கவில்லை. அவருக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும். இப்போது அடுத்தடுத்து 2 டி20 உலகக் கோப்பைகள், பின்பு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் இறுதிக்கு தகுதிப்பெறுவதே சாதனைதான், சில நேரங்களில் கோப்பை கை நழுவிவிடும்" என்றார் கோலி.
மேலும் பேசிய அவர் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா பெற்ற தோல்விக்கு இங்கிலாந்தின் சீதோஷனம் காரணம் என சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை நம்முடைய பேட்டிங்கில் ஏதோ ஒன்று மிஸ் ஆனது. அணியில் இருக்கும் பெரிய பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது, பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாதது ஆகியவைதான் தோல்விக்கு காரணம். இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் பதட்டம் எல்லாம் இல்லை. ஏனென்றால் நாங்கள் ஐசிசியின் மூன்று உலகக் கோப்பையை வென்று இருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாள்களில் கோலி ஐசிசி கோப்பைகளை வெல்வார்" என்றார் சுரேஷ் ரெய்னா.
இறுதியாக பேசிய அவர் "அடுத்து 12 அல்லது 16 மாதங்களில் ஐசிசி கோப்பை இந்தியாவின் வசம் வரும். அப்போது கோலி ஐசிசி கோப்பையை வெல்மாட்டார் என்ற கூற்று பொய்யாகும். இப்போதிருக்கும் இந்திய அணி அவ்வளவு திறமையானது, அவர்களை நாம் மதிக்க வேண்டும்" என்றார் சுரேஷ் ரெய்னா.

