விராத் கோலியை ட்ரம்ப்புடன் ஒப்பிட்ட ஆஸி. ஊடகம்
விளையாட்டு உலகின் டொனால்ட் ட்ரம்ப் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோலியை ஆஸ்திரேலிய ஊடகம் விமர்சித்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் டெய்லி டெலகிராப் பத்திரிகை கோலியை, ட்ரம்ப்புடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த 3ஆவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டி குறித்து அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில், விளையாட்டுலகின் டொனல்ட் ட்ரம்ப் போன்று விராத் கோலி செயல்படுவதாக விமர்சித்துள்ளது. விராத் கோலி, தன் மீதான விமர்சனங்களை மறைக்க டொனால்ட் ட்ரம்ப்பைப் போன்றே ஊடகங்களை விமர்சிக்கத் தொடங்கி இருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு டெஸ்டில் ஏற்பட்ட டிஆர்எஸ் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது புதிய சர்ச்சையினை ஆஸ்திரேலிய ஊடகம் தொடங்கிவைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகிகள் போல அந்நாட்டு ஊடகங்கள் செயல்பட்டு வருவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.