விளையாட்டு
‘பர்த்டே பேபி’ ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் விராட் கோலி வாழ்த்து
‘பர்த்டே பேபி’ ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் விராட் கோலி வாழ்த்து
ரோஹித் சர்மாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் விளாசிய இவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன. இவரது பிறந்தநாளுக்கு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தைத் தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் ஹிட்மேன். இன்று ரோஹித்திற்கு தனித்துவமான நாள். கொல்கத்தா மைதானத்தில் வெள்ளை உடையுடன் அவர் வேட்டையாடும் காட்சி. அவர் விரும்பிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று” எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது ட்விட்டர் பக்கத்தில், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஹித். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் இன்னும் பல நேர்த்தியான இன்னிங்ஸ்களையும் கொடுத்து ஆசீர்வதிப்பார். பாதுகாப்பாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மயங் அகர்வால் அவரது பதிவில் ரோஹித்துடன் உள்ள புகைப்படத்தைப் பதிவேற்றிவிட்டு, “ரோஹித்துடன் இருந்த சிறப்பான தருணம். எனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இவர் என்னைச் சதத்திற்கு வழிநடத்தினார். பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரோஹித்!” எனக்கூறியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா, அவரது பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள், ரோஹித்! இந்த மோசமான காலகட்டத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சியான ஆரோக்கியத்திற்கு வாழ்த்துக்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனக் கொரோனா ஊரடங்கைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

