ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்டில் விளையாடுகிறதா இந்தியா ?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது காபாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு மேற்கொண்டு அதனை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தது. இதற்கு யோசித்து சொல்கிறோம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பதிலளித்திருந்தது. ஆனால் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இப்போது கேப்டன் விராட் கோலி ஒப்புதல் அளித்திருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அண்மையில் பேசிய கோலி "நாங்கள் இந்தச் சவாலுக்கு தயாராக இருக்கிறோம். அது காபா, பெர்த் ஆகிய எந்த இடமாக இருந்தாலும் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒரு பிரச்னையே இல்லை. பகலிரவு டெஸ்ட் போட்டி இப்போது மிகவும் அற்புதமாக மாறி வருகிறது. அதனால் நாங்கள் திறந்த மனதுடன் எப்போதும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு தயாராகவே இருக்கிறோம்" என்றார்.
இந்தியா இதற்கு முன்பு தன்னுடைய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை வங்கதேசம் அணிக்காக விளையாடியது. கடந்தாண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றது. இதற்கு முன்பு 2018-2019 இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியை பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன் அனுபவம் இல்லாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கையை நிராகரித்தது.