கோலியை தெரிந்த நமக்கு.. மந்தனாவை தெரியாதது ஏன்..?
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணியை கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மகளிர் அணிக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது மிகவும் வேதனையான விமர்சனமாக இன்றளவும் உள்ளது. கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அசத்தலாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று ரன்னர் அப் ஆனது.
இந்நிலையில், தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியும், மகளிர் கிரிக்கெட் அணியும் ஒரே நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. ஒரே நேரத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. ஒன்றுபோல் தென்னாப்பிரிக்கா அணியை பந்தாடி தோற்கடிக்கிறது. ஆனால், நமக்கு ஆண்கள் கிரிக்கெட் அணியின் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. போட்டி குறித்த எல்லா தகவல்களும், வர்ணனைகளும் கிடைக்கிறது. ஆனால் பெண்கள் அணி குறித்து எந்த தகவலும் கிடைப்பதில்லை. சில சைட்டில் கிடைக்கும் லைவ் ஸ்கோர் மட்டும்தான்.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆண்கள் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளை வென்றுள்ளது. அதேபோல், பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரையே வென்றுவிட்டது. ஆண்கள் கிரிக்கெட் போட்டி 12 மணிக்கு முடிந்தாலும் மறுநாள் செய்திதாள்களில் முழு விவரம் வந்துவிடுகிறது. ஆனால், 11 மணிக்கு முடிந்தாலும் பெண்கள் அணி குறித்த செய்தி வருவதே இல்லை.
கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசினார். விராட் கோலி குறித்து அத்தனை செய்திகள் வலம் வருகிறது. அதேபோல், மகளிர் கிரிக்கெட் அணியில் ஸ்மிரிதி மந்தனாவும் தனது ஆட்டத்தால் கலக்கி வருகிறார். முதல் போட்டியில் 98 பந்தில் 84 ரன்கள் அடித்த மந்தனா, இரண்டாவது போட்டியில் 129 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் என்ன ஒற்றுமை என்றால் விராட் கோலிக்கும், மந்தனாவுக்கும் ஜெர்ஸி எண் 18 தான். ஜெர்ஸி எண் ஒன்றாக இருந்து என்ன செய்ய, கோலி தெரிவது போல் மந்தனா தெரிவது இல்லையே.
நேற்றைய போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் அடித்தது 303 ரன்கள். அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணி அடித்தது 302 ரன்கள். விராட் அணி தென்னாப்பிரிக்காவை 179 ரன்னில் சுருட்ட மகளிர் அணியோ 124 ரன்னில் சுருட்டி அசத்தியுள்ளது. பந்துவீச்சு பேட்டிங் என அனைத்து பிரிவிலும் மகளிர் அணி அசத்தி வருகிறது. நம் பார்வை என்றுதான் மகளிர் அணி பக்கம் திரும்புமோ தெரியவில்லை.