“வில்லியம்சன் பேட்டிங்கை பார்த்து அப்போதே வியந்தேன்” - விராட் கோலி
2007 ஆம் ஆண்டே கேன் வில்லியம்சன் சிறப்பானவராக இருந்தார் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பு, 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அதேபோல் தற்போது நடைபெறும் அரையிறுதிப் போட்டியிலும் அவர்கள் இருவர் தலைமையிலான அணிகள் மோதுகின்றன. அப்போதைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், நாளையப் போட்டியை முன்னிட்டு கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, 2008 ஆம் ஆண்டின் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அதேபோல், 2007 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சென்று விளையாடியது குறித்தும் பல்வேறு தகவல்களை கூறினார். விராட் பேசுகையில், “2008 உலகக் கோப்பை தொடர் மட்டுமல்ல, 2007 ஆம் நியூசிலாந்து சென்று விளையாடியதில் இருந்து வில்லியம்சனை நான் கவனித்து வருகிறேன். அவர் பேட்டிங் செய்யும் போது நான் ஸ்லீப்பில் நிற்பேன். அவர் பேட்டிங் விதத்தை பார்த்து அப்போதே வியந்தேன். அவ்வளவு நேர்த்தியாக விளையாடினார்.
தற்போது, உலகக் கோப்பை தொடரில் பல இக்கட்டான சமயங்களில் அணியை வழிநடத்தி வெற்றிக்கு கொண்டு செல்கிறார். அவர் வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட” என்றார்.