’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, பாகிஸ்தான் மைதானத்தில் விளையாடுவதை காண ஆவலாக உள்ளதாக அந்நாட்டு ரசிகர் ஒருவர் ஏந்திய பதாகை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி, லாகூரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியிலும் பாகிஸ் தான் அணி தோற்றதால், இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியை காண வந்த சப்னாஸ் ஷரீப் காஸ்மி என்ற ரசிகர், கையில் ஒரு பதாகையை ஏந்தியிருந்தார். அதில், ‘விராத் கோலி நீங்கள் பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் விளையா டுவதை பார்க்க வேண்டும்’ என்று எழுதியிருந்தார்.
பின்னர் அதையே ட்விட்டரில், ’நான் உங்களின் தீவிர ரசிகன். நாங்கள் உங்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறோம். நீங்கள் பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் விளையாடுவீர்கள் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ரசிகருக்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
‘உங்களை போல பாகிஸ்தான் அணியும் இந்தியா வந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம்’ என்று சிலர் தெரிவித்துள் ளனர். ’இருநாட்டு உறவிலும் நிலமை சீரடையும்போது உங்கள் எண்ணம் நிறைவேறும்’என்று சிலர் கூறியுள்ளனர்.