Form out - தொடரும் சோகமும்; விரக்தியான விராட் கோலியும்!

Form out - தொடரும் சோகமும்; விரக்தியான விராட் கோலியும்!
Form out - தொடரும் சோகமும்; விரக்தியான விராட் கோலியும்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதியிருந்தன. இந்தப் போட்டியை ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியின் முடிவில், அதிகம் விவாதிக்கப்படுவதாக மாறியிருப்பது விராட் கோலியின் ஃபார்ம்தான்.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்காமல் இருக்கிறார் எனும் விமர்சனமும் அந்த சதத்திற்கான எதிர்பார்ப்பும் கோலி மீது ஒவ்வொரு போட்டியிலுமே கூடிக்கொண்டே சென்றது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு இன்னிங்ஸை கடந்த இரண்டு ஆண்டுகளில் கோலி ஆடவே இல்லை. ரிவர்ஸ் கியர் போட்டு ஓவ்வொரு போட்டியிலுமே அவருடைய ஃபார்ம் மேலும் மேலும் அடிவாங்கிக் கொண்டிருந்தது. அந்த ஃபார்ம் அவுட்டின் உச்சமாக இந்த சீசன் மாறியிருக்கிறது.

இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் ஆடியிருக்கும் விராட் கோலி 128 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 119.62 மட்டுமே. இதுவரை ஒரு அரைசதத்தை கூட அடித்திருக்கவில்லை. இப்படியான ஒரு சோகமான சம்பவம் விராட் கோலிக்கு அரிதினும் அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.

ஐ.பி.எல் இன் அறிமுக சீசனான 2008 லிருந்தே விராட் கோலி பெங்களூரு அணிக்காகத்தான் ஆடி வருகிறார். அந்த தொடக்க சீசனில் விராட் கோலி ரொம்பவே இளம் வீரராக இருந்தார். அப்போதுதான் U19 உலகக்கோப்பையை முடித்துவிட்டு வந்திருந்தார். அந்த அறிமுக சீசனில் விராட் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

அதற்கடுத்து எந்த சீசனில் முதல் 9 போட்டிகளில் அரைசதம் அடிக்காமல் இருந்திருக்கிறார்? என தேடிப்பார்த்தால் 2010 சீசன் கண்ணில்படுகிறது. அந்த சீசனில் முதல் 9 போட்டிகளில் அரைசதம் அடிக்காமல் 10 வது போட்டியில் அடித்திருப்பார். அதன்பிறகு, 2014 சீசனிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. முதல் 9 போட்டிகளிலும் அரைசதம் அடிக்காமல் 12 வது போட்டிக்கு சென்றே அந்த சீசனில் முதல் அரைசதத்தை அடித்திருக்கிறார்.

மற்ற எந்த சீசனிலுமே இப்படி 9 போட்டிகளில் தொடர்ச்சியாக விராட் கோலி சொதப்பியதே இல்லை. 2014 க்கு பிறகு அந்த ரெக்கார்ட் இந்த சீசனில்தான் மீண்டும் நிகழ தொடங்கியிருக்கிறது.

கோலியின் ஐ.பி.எல் கரியரில் 2016 சீசன் ரொம்பவே முக்கியமானது. அந்த சீசனில் விராட் கோலி ஓப்பனராக களமிறங்கியிருந்தார். கோலியின் உச்சபட்ச ஃபார்ம் அந்த சீசனில்தான் வெளிப்பட்டிருந்தது. 4 சதங்களுடன் 973 ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். அவரின் ஆவரேஜ் மட்டும் 80 க்கும் மேல் இருந்தது. விராட் கோலி அவரது ஐ.பி.எல் கரியரில் நம்பர் 3 யில் 93 இன்னிங்ஸ்களில் ஆடி 2815 ரன்களை எடுத்திருக்கிறார். அதேநேரத்தில் ஓப்பனராக 76 இன்னிங்ஸ்களே ஆடி 2750 ரன்களை எடுத்திருக்கிறார். நம்பர் 3 யில் விராட் கோலியின் ஆவரேஜ் 35.2 மட்டுமே. அதேநேரத்தில் ஓப்பனிங் இறங்கும்போது அவரின் ஆவரேஜ் 43.7 ஆக இருக்கிறது. ஓப்பனிங்கில் இறங்கும் போது இன்னும் அதிரடியாகவும் ஆடியிருக்கிறார். ஏனெனில், நம்பர் 3 யிக் 123.8 ஆக இருக்கும் கோலியின் ஸ்ட்ரைக் ரேட், ஓப்பனிங்கில் 136.7 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு உகந்த இடமாக ஓப்பனிங் ஸ்பாட்டே கருதப்பட்டது. ஆனால், கோலி அடுத்தடுத்த சீசன்களில் அணியின் சமநிலைக்காக நம்பர் 3 க்கே மீண்டும் இறங்கினார். இடையிடையே அவ்வபோது ஓப்பனிங் இறங்கினார். 2020 சீசனில் நம்பர் 3 இல் இறங்கியவர், கடந்த 2021 சீசனில் மீண்டும் ஓப்பனர் ஆனார். இந்த சீசனில் மீண்டும் நம்பர் 3 க்கு வந்தார்.

ஆனால், நம்பர் 3 யில் அவர் இறங்கிய முதல் 8 போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளில் கோல்டன் டக் அவுட் வேறு ஆகியிருந்தார். அதனால், விராட் கோலியை அவருக்கு சௌகரியமாக இருக்கும் ஓப்பனிங் ஸ்பாட்டிலேயே இறக்கிவிடுவோம் என்ற மனநிலைக்கு பெங்களூரு வந்திருந்தது. இதனால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வழக்கமான ஓப்பனரான அனுஜ் ராவத் நீக்கப்பட்டு, டூப்ளெஸ்சிஸுடன் கோலி ஓப்பனராக்கப்பட்டிருந்தார்.

பெங்களூரு அணி 145 ரன்களை சேஸ் செய்த போது டூப்ளெஸ்சிஸுடன் கோலி களத்திற்குள் இறங்கினார். முதல் பந்திலேயே ஸ்ட்ரைக் எடுத்துக் கொண்டார். கடைசி இரண்டு போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட் ஆகிவிட்டு மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே ஸ்ட்ரைக் எடுப்பதற்கு பெரிய தெம்பு வேண்டும். அது கோலியிடம் இருந்தது. இதுவே ஒரு பாசிட்டிவ்வான விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால், கோலி பந்துகளை எதிர்கொள்ள தொடங்கிய பிறகு எந்த பாசிட்டிவிட்டியுமே இல்லை. இன்னிங்ஸின் முதல் 10 பந்துகளையும் அவர்தான் எதிர்கொண்டிருந்தார். 9 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகி சென்றார்.

முதல் இரண்டு பந்துகளை நன்றாக மிடில் ஆஃப் தி பேட்டில் டிஃபண்ட் செய்திருந்தார். மூன்றாவது பந்திலிருந்துதான் பிரச்சனை தொடங்கியது. ஷார்ட் லெக்குக்கு கொஞ்சம் பின்னால் ஒரு ஃபீல்டரும் ஷார்ட் மிட் விக்கெட்டும் வைத்து போல்ட் ஓவர் தி விக்கெட்டில் வந்து வீசிய பந்தை இந்த ஃபீல்ட் செட்டப்புக்கு கேட்ச் கொடுக்கும் வகையிலேயே கோலி ஒரு தட்டு தட்டிவிட்டார். அந்த ஷார்ட் லெக்குக்கு கொஞ்சன் பின்னால் நின்ற டேரில் மிட்செல் அதை ஜஸ்ட் மிஸ்ஸில் ஒரு பிட்ச்சில் கேட்ச் ஆக்கியிருந்தார். டேரில் மிட்செல் மட்டும் இன்னும் ஒரு இன்ச் கூடுதலாக முன்னால் தாவியிருந்தால் கோலி ஹாட்ரிக் டக் அவுட் ஆகியிருப்பார். அடுத்த பந்தை போல்ட் யார்க்கருக்கு முயன்று ஸ்லாட்டில் வீச அதை கோலி லெக் சைடில் பவுண்டரி ஆக்கியிருந்தார். அடுத்த பந்தே இன்சைட் எட்ஜ்ஜாகி நல்லவேளையாக ஸ்டம்பை பறிகொடுக்காமல் ஃபைன் லெக்கில் பவுண்டரி ஆக்கியிருந்தார். கடைசி பந்தில் சிங்கிள் தட்டி அடுத்த ஓவரிலும் ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டார். பிரஷீத் கிருஷ்ணா வீசிய இந்த இரண்டாவது ஓவரில்தான் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களாகவே தொடர்ந்து வீசி கோலியை டெம்ப்ட் ஆக்கி பிரஷீத் கிருஷ்ணா விக்கெட் எடுத்தார்.

ஒயிடாக ஒரு ஷார்ட் பாலை வீசிவிட்டு அடுத்த பந்தையே கொஞ்சம் டைட்டாக ஷார்ட் பிட்ச் ஆக்க அதை புல் ஷாட் அடிக்க முயன்று எட்ஜ் ஆகி பாயிண்ட்டில் கேட்ச் ஆகியிருப்பார். ஓப்பனிங் இறங்கினாலாவது கோலியிடம் ஏதேனும் மாற்றம் தெரியும். ஃபார்முக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஓப்பனிங் இறங்கிய முதல் போட்டியிலேயே ஃபார்முக்கு வராவிட்டாலும் அதற்கான அறிகுறியாவது தென்பட்டிருக்க வேண்டும். அதுவும் இல்லை. க்ரீஸில் நின்று எதிர்கொண்ட அந்த 10 பந்துகளிலுமே பெரும்பாலும் திணறத்தான் செய்தார். முன்பெல்லாம் ஒரு ஷாட்டை அவர் நினைத்தபடி நினைத்த துல்லியத்தோடு ஆட முடியவில்லையெனில் தன் மீதே கோபப்பட்டு கொள்வார். ஒரு போட்டியில் சொதப்பி பெவிலியனுக்கு நடையைக்கட்டும் போது அடுத்த போட்டியில் வென்றே தீர வேண்டும் என்கிற வெறி கோலியிடம் வெளிப்படும். ஆனால், இப்போதெல்லாம் விக்கெட்டை விட்டவுடன் Laughing Buddha போல முற்றும் பெற்றவராக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு செல்கிறார். கோலியின் ஆட்டமும் மாறியிருக்கிறது. கோலியும் மாறியிருக்கிறார்.

கோலியின் ஆட்டத்தின் மீதான மாற்றம் இந்த சீசனில் இல்லை. கடந்த இரண்டு சீசன்களாகவே தென்படுகிறது. 2020 சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 121 மட்டும்தான். கடந்த சீசனில் 119 மட்டும்தான். இந்த சீசனிலும் 119 தான். தொடர்ச்சியாக மந்தமாக ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பும் சில சீசன்களில் இப்படி குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் அந்த சீசன்களில் கோலிக்கு எதிர் முனையில் கெய்ல் ஆடிக்கொண்டிருப்பார். கெய்ல் அதிரடி சூரராக வெளுக்கும்போது இன்னொரு முனையில் இருப்பவர் அவருக்கு ஒத்துழைக்கும் வகையில் மெதுவாகத்தான் ஆடியாக வேண்டும்.

ஆனால், இப்போது கோலிக்கு எதிர் முனையில் எந்த கெய்லும் இல்லையே. டீவில்லியர்ஸ் கூட இல்லை. ஆனாலும் கோலி மெதுவாக ஆங்கர் இன்னிங்ஸ்தான் ஆட விரும்புகிறார். அதை கோலி முழுமையாக செய்தாலே, அதாவது நின்று நிதானமாக தொடங்கி கடைசிக்கட்டத்தில் அடித்தார் எனில் அது அணிக்கு நல்ல பலனையே கொடுக்கும். கோலியின் திட்டமும் அதுதான். ஆனால், அதை அவரால் நினைத்தபடியே முழுமையாக செய்ய முடியவில்லை. அவர் எதிர்பார்ப்பின்படி இன்னிங்ஸை பில்ட் செய்ய தடுமாறுகிறார். இது ஐ.பி.எல் இல் மட்டுமில்லை. சர்வதேச கிரிக்கெட்டிலுமே விராட் கோலி இதே பிரச்சனையைத்தான் எதிர்கொள்கிறார்.

'விராட் கோலிக்கு இப்போது ஓய்வு தேவை. அவரிடம் இன்னும் 6-7 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது. ஓய்வெடுக்காமல் ஆடி அதை கெடுத்துவிடக்கூடாது' என ரவிசாஸ்திரி அறிவுரை கூறியிருக்கிறார். இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஆகியோர் இதேபோன்ற நிலைகளில் கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஒதுங்கி ஓய்வு பெற்று மீண்டும் புத்துணர்ச்சியோடு வந்து சாதித்துக் கொண்டிருக்கின்றனர். கோலி என்ன செய்யப்போகிறார்?

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com