2019 உலகக் கோப்பை வெற்றி யாரால், தோனியா? கோலியா?: கபில் தேவ் கருத்து!
2019 ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்து பேசியுள்ள கபில் தேவ், “விராட் கோலி புத்திக்கூர்மை உடைய கேப்டன். இந்தியாவில் தற்போதுள்ள இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனெனில் இதற்கு முன் இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா என்ற இரண்டு சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் தற்போது அணியில் இடம் பெறுவதே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தற்போது அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களின் திறமை வெளிப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அத்துடன், “விராட் கோலி ஆவேசமான குணம் உடையவர். ஆனால் தோனி மிகவும் சாந்தமான குணம் உடையவர். ஒரு அணியில் அனைவருமே ஆவேசமாக இருந்தால் அந்த அணி வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஒரு அணியில் அனைவருமே சாந்தமாக இருந்தாலும் அந்த அணி வெல்லாது. இரண்டுமே கலந்திருக்கும். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் இரண்டும் ஒன்றாக உள்ளது. எனவே விராட் கோலி தலைமையிலான மற்றும் தோனி வழிகாட்டுதலைக்கொண்ட இந்திய அணி அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய கபில், “ஹர்திக் பாண்டியா இளம் வீரர்களில் மிகவும் திறமையாக விளையாடுகிறார். அதனால் அவரிடம் அனைவரும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இதனால் அவருக்கு அழுத்தம் அதிகரிக்கப்படுகிறது. எனவே ஹர்திக் அழுத்தம் இல்லாத, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் பேட்டிங்கில் திறமையை வளர்த்துக்கொண்டால், அவர் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்வார்.” என்று பாராட்டினார்.

