சச்சின் சாதனையை நெருங்கும் வீரர் விராத் மட்டுமே: பாக்.முன்னாள் வீரர் கணிப்பு!
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் இப்போதைய ஒரே வீரர் விராத் கோலிதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன் னாள் சுழல் பந்துவீச்சாளரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகருமான சக்லைன் முஷ்டாக் சொன்னார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரில் இப்போது பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்தியாவும் வென்றுள்ளன. நான்காவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
இந்த தொடரில் இந்திய கேப்டன் விராத் கோலி, 2 சதம், 2 அரை சதம் உட்பட 440 ரன்கள் குவித்துள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை நெருங்குவார் என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘ஒரு பேட்ஸ்மேனாக சச்சின் மிகப்பெரிய வீரர். அவருடன் யாரையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால் அவர் சாதனையை நெருங்கும் இப்போதைய வீரர் விராத் கோலி மட்டுமே. அவர் ஒவ்வொரு பந்தையும் விளையாடுகிறார். ஒவ்வொரு ரன்னையும் ஸ்கோர் ஆக்குகிறார். ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக ஆடுகிறார். வெற்றிக்காக அவரது ரன் எடுக்கும் பசி ஆச்சரியமாக இருக்கிறது. இப்படிப் பட்ட ரன் பசிகொண்ட ஒருவர் கண்டிப்பாக ரன் வேட்டைக்காக, எதையும் செய்வார். இங்கு நடக்கும் போட்டி, விராத்துக்கும் இங்கிலாந்து க்குமானதுதான்.
(சக்லைன் முஷ்டாக்)
அவரை விரைவில் வீழ்த்திவிட்டால், இங்கிலாந்து வெற்றி பெறுவது எளிதானது. விராத் கோலி போன்ற உலகத் தரமான பேட்ஸ்மேன் அணியில் இருந்தால் ஒட்டு மொத்த பேட்ஸ்மேனுக்கும் உத்வேகமாக இருக்கும்' என்றார்.