சிக்ஸருடன் ஜார்க்கண்ட் அணிக்கு வெற்றியைப் பரிசளித்த தோனி
விஜய் ஹசாரே கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் விதர்பா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜார்க்கண்ட் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
டெல்லி பாலம் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஜார்க்கண்ட் அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த விதர்பா அணி, 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ரவி ஜங்கிட்டின் 62 ரன்கள் உதவியுடன் 159 ரன்களை எடுத்தது. 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பிரதியூஷ் சிங் (33) மற்றும் இஷான் கிஷான் (35) ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இஷான் ஜக்கியின் 41 ரன்கள் உதவியுடன் ஜார்க்கண்ட் அணி 45.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் தோனி 46 ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி வெற்றியை வசமாக்கினார். அவர் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஜார்க்கண்ட் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.