இவர்தான் புது காலீஸ்: பிளண்டரை புகழும் டுபிளிசிஸ்
தென்னாப்பிரிக்க அணியின் புதிய காலிஸ் என்று ஆல்ரவுண்டர் பிலாண்டரை கேப்டன் டுபிளிசிஸ் புகழ்ந்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, 340 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிரண்ட்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற போட்டியில் நான்காவது நாளான நேற்று 474 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது.
தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 133 ரன்களில் சுருண்டது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் டுபிளிசிஸ், தென்னாப்பிரிக்க அணியின் புதிய காலிஸ் என்று ஆல்ரவுண்டர் பிலாண்டரைப் புகழ்ந்தார்.
‘அவர் இரண்டு இன்னிங்ஸிலும் 7-வது வீரராக களமிறங்கி எடுத்த 54, 42 ரன்கள் அணிக்கு முக்கியமானதாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் பந்து வீசி அவர் எடுத்த 3 விக்கெட்டும் வெற்றிக்கு உதவியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் காலீஸ் போல செயல்படுகிறார். சிறந்த கிரிக்கெட் வீரர் அவர்’ என்றார்.

