வெளிநாட்டு மண்ணில் கேஎல் ராகுல் சிறப்பாக ஆடக்கூடியவரா? - அம்பலப்படுத்திய வெங்கடேஷ் பிரசாத்

வெளிநாட்டு மண்ணில் கேஎல் ராகுல் சிறப்பாக ஆடக்கூடியவரா? - அம்பலப்படுத்திய வெங்கடேஷ் பிரசாத்
வெளிநாட்டு மண்ணில் கேஎல் ராகுல் சிறப்பாக ஆடக்கூடியவரா? - அம்பலப்படுத்திய வெங்கடேஷ் பிரசாத்

வெளிநாட்டு மண்ணில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்ற ராகுல் டிராவிட்டின் கருத்துக்கு பதிலளித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் டெஸ்ட்டில் 20 ரன்களும், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் வெறும் ஒரு ரன்னும் மட்டுமே எடுத்திருந்தார். இந்த தொடருக்கு முந்தைய ஆட்டங்களிலும் கேஎல் ராகுல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.  இதனால் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்.

இருப்பினும் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு செவிகொடுக்காத இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தொடர்ந்து கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்குவோம் என்றும் ஏனென்றால் கேஎல் ராகுல் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடிய தொடக்க வீரர் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், வெளிநாட்டு மண்ணில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்ற ராகுல் டிராவிட்டின் கருத்துக்கு பதிலளித்துள்ள வெங்கடேஷ் பிரசாத், '' கேஎல் ராகுல் வெளிநாட்டில் 56 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கிறார். 6 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் அவருடைய சராசரி 30 என்றளவில் மட்டுமே உள்ளது. அதேசமயம் ஷிகர் தவானின் வெளிநாட்டு போட்டிகளை பார்த்தோமானால் 41 இன்னிங்ஸ்களில் விளையாடி 5 சதங்கள் அடித்துள்ளார். அவருடைய சராசரி 39.1ஆக உள்ளது.

மயங்க் அகர்வால் சொந்த மண்ணில் 69 சராசரிக்கு மேலும், வெளிநாட்டில் 23 இன்னிங்ஸ்களில் விளையாடி 25 சராசரிக்கு மேலும் வைத்துள்ளார். ஷுப்மான் கில் 14 வெளிநாட்டு இன்னிங்ஸ்களில் விளையாடி சராசரி 37 வைத்துள்ளார்.  அஜிங்க்யா ரஹானே 90 வெளிநாட்டு இன்னிங்ஸ்களில் விளையாடி 8 சதங்கள், 17 அரை சதங்களுடன் சராசரி 40 வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் கேஎல் ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. அவர் இந்தூரில் நடைபெறவிருக்கும் டெஸ்டில் ஃபார்முக்கு திரும்பி என்னைப் போன்ற விமர்சகர்களின் வாயை அடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்று ட்விட்டரில் தரவுகளுடன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com