ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி ஆறாவது வெற்றியை நேற்று பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் புனே அணியும் நேற்று மோதின. புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர், பீல்டிங்கை தேர்வு செய்தார். புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ராகுல் திரிபாதி களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 65 ரன்னாக இருந்த போது ரஹானே 46 ரன்னில் (41 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுனில் நரேன் பந்து வீச்சில் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுமித்தும் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 12.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை தொட்டது. திரிபாதி 38 (23 பந்து, 7 பவுண்டரி) எடுத்த நிலையில், பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் போல்டானார்.
அடுத்து இறங்கிய, தோனி 11 பந்துகளில் 23 ரன்னிலும் மனோஜ் திவாரி ஒரு ரன்னிலும் குல்தீப் யாதவ் பந்தில் அடுத்தடுத்து உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்கள். தொடர்ந்து வந்த டேனியல் கிறிஸ்டியன் 16, சுமித் 51 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், சுனில் நரேன், சாவ்லா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. உத்தப்பா 87 ரன்னும் (47 பந்துகள், 7 பவுண்டரி, 6 சிக்சர்), கம்பீர் 62 ரன்னும் (46 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். புனே அணி தரப்பில் உனட்கட், கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள். உத்தப்பா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா.

