உலகின் அதிவேகவீரர் உசேன் போல்ட்டின் சாதனைகள் (வீடியோ)
ஓடுகளத்தில் சிறுத்தையைப்போல விரைந்து ஓடுவார். துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு போலப் பாய்ந்து செல்வார். வரலாற்றில் கணக்கெடுக்கப்பட்ட வரையில் எந்த மனிதரும் இவரைப் போன்ற வேகத்தில் ஓடியதில்லை.
ஒரு மனிதன் இவ்வளவு வேகத்தில் ஓட முடியுமா என்று நிபுணர்களே வியந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்ப முடியாத வேகம். பரிணாம வளர்ச்சியின் புதிய அவதாரம் உசேன் போல்ட். இன்றைய அகராதியில் வேகத்துக்கான மறுசொல்.
கரீபியன் தேசமான ஜமைக்காவை உலகறியச் செய்தவர்களுள் ஒருவர் உசேன் போல்ட். அவரது இன்றைய பெருமைகளின் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி. நூறு மீட்டர், இருநூறு மீட்டர் என இரு போட்டிகளிலும் வெற்றிபெறப் போவதாக உசேன் போல்ட் அறிவித்திருந்தது, பலரது புருவங்களையும் உயரச் செய்தது. அனுபவம் இல்லாத வீரரால் இத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடியாது என்று விமர்சனங்கள் வந்தன. சிலர் தலைக்கனம் என்றுகூட சொன்னார்கள்.
ஆனால் 200 மீட்டரிலும் 400 மீட்டரிலும் உலக சாதனையைத் தக்க வைத்திருந்த மிக்கேல் ஜான்சன், உசேன் போல்டுக்கு ஆதரவாகப் பேசினார். உசேன் போல்டின் சொற்களை அவர் தன்னம்பிக்கையாகப் பார்த்தார். ஜான்சனின் எண்ணம் பொய்த்துப் போகவில்லை. நூறு மீட்டர் மற்றும் இருநூறு மீட்டர் தொடக்கச் சுற்றுகளில் எதிர்பார்த்த வேகத்திலேயே உசேன் போல்ட் ஓடினார். நூறு மீட்டர் ஓட்டத்தின் காலிறுதிப் போட்டியில் அவரது நேரம் 9.92 நொடிகள். அரையிறுதியில் 9.85 நொடிகள்.
பெய்ஜிங் ஒலிம்பிக்கின் 100 மீட்டர் ஓட்டத்தில் இறுதிப் போட்டி. வெறும் பத்தே நொடிகளில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டு விடும். சொந்த நாட்டைச் சேர்ந்த அசஃபா பாவல் மிக அருகிலேயே ஓடுவதற்குத் தயாராக இருந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் வீரர்கள் வேகமெடுக்கிறார்கள். சில நொடிகளில் அரிய சாதனை நிகழ்த்தப்படுகிறது. நூறு மீட்டர் தொலைவை உசேன் போல்ட் 9.69 நொடிகளில் கடந்து, புதிய உலக சாதனையைப் படைத்தார். எல்லைக்கோட்டைத் தொடும்போது, தனக்கு அடுத்தாக வந்த டிரினாட் அண்ட் டொபாகோவைச் சேர்ந்த ரிச்சர்ட் தாம்சனைவிட பல மீட்டர்கள் முந்தியிருந்தார் போல்ட்.
இதுபோன்று தனது அசூர ஓட்டம் மூலம் பல்வேறு போட்டிகளை வென்றதால் விளையாட்டு உலகமே உசேன் போல்ட்டைக் கொண்டாடியது.