இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்காக விளையாடுவதே தமது கனவு என தடகளப் புயல் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.
ஜமைக்காவின் உசைன்போல்ட் தடகளத்தில் 100மீ, 200மீ போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.உலகின் அதிவேக மனிதர் என்று அறியப்படும் போல்ட் கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். போல்டுக்கு தடகளத்தை தவிர்த்து கிரிக்கெட், கால்பந்துகளிலும் ஆர்வம் அதிகம். கடந்த 2014ஆம் ஆண்டு காட்சிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் உசைன் போல்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். பின்னர் இருவரும் ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொண்டனர்.
தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசேன் போல்ட், கால்பந்திலும் சிறந்த வீரராக ஜொலிக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஜெர்மனியில் டார்ட்மண்ட் கால்பந்து அணி வீரர்களுடன் போல்ட் பயிற்சி மேற்கொண்டார். ஜெர்மனியில் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் விளையாட விரும்புவதாகக் கூறினார். மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடவேண்டும் என்பதே தனது கனவு என்றும், அதனை நனவாக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்றும் உசேன் போல்ட் தெரிவித்தார்.