ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்; இந்தியாவின் 40 ஆண்டுகால சாதனையை தகர்த்த அமெரிக்கா!
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நாளுக்குநாள் பழைய சாதனைகள் முறியடிக்கப்பட்டும் புதிய சாதனைகள் படைக்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் 40 ஆண்டுகால சாதனையை அமெரிக்கா முறியடித்துள்ளது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக ஓமனில் லீக் 2 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா - ஓமன் இடையிலான ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த ஓமன் அணி முதலில் அமெரிக்காவை பேட் செய்ய பணித்தது.
இதையடுத்து அந்த அணி 35.3 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மிலிண்ட் குமார் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார். பின்னர், 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்கை நோக்கி ஓமன் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி, அமெரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 25.3 ஓவர்களில் 65 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் அமெரிக்கா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், ஓவர் எதுவும் குறைக்கப்படாமல் முழுமையாக நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் மிகக் குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்பு 1985-ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 125 ரன்களை இலக்காக நிர்ணயித்து எதிரணியை 87 ரன்னில் முடக்கி வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 40 ஆண்டுகால சாதனையை அமெரிக்கா தற்போது முறியடித்துள்ளது.
தவிர, இன்னொரு சாதனையும் இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது ஓமன் தரப்பில் 5 பந்துவீச்சாளர்களும் அமெரிக்கா தரப்பில் 4 பந்துவீச்சாளர்களும் பந்து வீசினர். இவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், முழுமையாக நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர்கூட பந்து வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும். இதில் அமெரிக்காவின் நாஸ்துஷே கெஞ்சே 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.