நிதிஷ் ராணா அரைசதம்; 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா-தடுமாறும் டெல்லி அணி

நிதிஷ் ராணா அரைசதம்; 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா-தடுமாறும் டெல்லி அணி
நிதிஷ் ராணா அரைசதம்; 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா-தடுமாறும் டெல்லி அணி

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்துள்ளது.

நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 40 போட்டிகள் முடிவடைந்தநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று 41-வது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 வெற்றி, 4 தோல்வியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடனும் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் டெல்லி 7-வது இடத்திலும், கொல்கத்தா 8 -வது இடத்திலும் உள்ளன. இதனால் 4-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்று ஆவலுடன் களமிறங்கின. இரு அணிகளிலும் சில வீரர்கள் மாற்றப்பட்டனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் மற்றும் வெங்கடேஷ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (42) மட்டும் நிலைத்து ஆட, மற்ற வீரர்கள் டக் அவுட் மற்றும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர்.

இதில் நிதிஷ் ராணா 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என விளாசி, 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டெல்லி அணியின் குல்தீப் யாதவ் சுழலில், அந்த அணி வீரர்கள் பந்துகளை எதிர்கொள்வதில் தடுமாறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 எடுத்து ஆட்டமிழந்தது. டெல்லி அணி அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், சேட்டன் சக்கரியா மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கும் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பிருத்திவி ஷா, எதிர்கொண்ட முதல் பந்திலேயே உமேஷ் யாதவ் பந்து வீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ள மிச்செல் மார்ஷ், டேவிட் வார்னருடன் இணைந்து விளையாடினார். அதிரடியாக 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தநிலையில், ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து லலித் யாதவ் மற்றும் டேவிட் வார்னர் விளையாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com