இந்தியாவுக்கு எதிராக பிக்சிங்கா?: வாயை கொடுத்து வம்பில் மாட்டிய உமருக்கு சம்மன்!

இந்தியாவுக்கு எதிராக பிக்சிங்கா?: வாயை கொடுத்து வம்பில் மாட்டிய உமருக்கு சம்மன்!
இந்தியாவுக்கு எதிராக பிக்சிங்கா?: வாயை கொடுத்து வம்பில் மாட்டிய உமருக்கு சம்மன்!

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது இந்தியாவுக்கு எதிரான மேட்ச் பிக்சிங் செய்ய என்னை சிலர் அணுகினர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கூறியதை அடுத்து அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் உமர் அக்மல். இவர், டிவி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அதில், 2015ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மேட்ச் பிக்சிங் செய்ய சிலர் தன்னை அணுகியதாகத் தெரிவித்திருந்தார். அதோடு ஹாங்காங்கில் நடந்த சூப்பர் சிக்ஸ் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த தொடரின் போதும் மேட்ச் பிக்சிங் செய்ய தன்னை அணுகினர் என்று கூறியிருந்தார். இந்தியாவுக்கு எதிரான அனைத்துப் போட்டிகளின் போது தன்னை மேட்ச் பிக்சிங் செய்ய அணுகுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

‘ஹாங்காக் சிக்சஸ் தொடரின் போது, எனது சகோதரர் கம்ரன் அக்மல் கேப்டன். அதிகாலை 3-4 மணி இருக்கும்போது தொடர்பு அதிகாரி அறை கதவைத் தட்டினார். திறந்தேன். அவர் ஒருவரை காண்பித்து, ’இவர் உங்களிடம் 5 நிமிடம் பேச வேண்டுமாம்’ என்றார். அவரை உள்ளே அழைத்தேன். 

‘நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் பணத்தை உங்கள் கணக்குக்கு மாற்றுவோம். தங்கம், வைரங்களாகவும் தருவோம். இந்த தொடரில் நீங்கள் சரியாக விளையாட வேண்டாம்’ என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. ’வெளியே போ’ என்று கூறிவிட்டேன். பின்னர் எனது சகோதரரிடம், ‘புக்கி என்னை சந்தித்தது இதற்குள் வெளியே போயிருக்கும். அதனால் இந்த தொடரில் விளையாடவில்லை’ என்றேன். என் சகோதரர் இந்தப் பிரச்னையை சேர்மனிடம் கொண்டு சென்றார். அவர், ‘உன் மீது நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு பிரச்னையில்லை’ என்றார்.

பிறகு நான் விளையாடினேன். ’2015 உலகக் கோப்பை போட்டியின்போது, அடிலெய்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துகளை விளையாடாமல் விட்டுவிடுங்கள் அல்லது ஒரு பந்தில் மட்டும் விளையாடுங்கள். 2 லட்சம் அமெரிக்க டாலர் தருகிறோம்’ என்ற ரீதியில் என்னிடம் பேசினார்கள். ’வாயை மூடு’ என்று சொல்லிவிட்டேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடும்போதெல்லாம் புக்கிகள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த தொலைபேசி அழைப்புகள் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கிறேன்’ என்றார்.

உமர் அக்மலின் இந்த பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினர், இதுபற்றி வரும் 27-ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். 


 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com