”இது அற்புதமான சாதனை” - யு19 உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு சச்சின் புகழாரம்

”இது அற்புதமான சாதனை” - யு19 உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு சச்சின் புகழாரம்
”இது அற்புதமான சாதனை” - யு19 உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு சச்சின் புகழாரம்

அகமதாபாத் மைதானத்தில் யு19 உலகக்கோப்பையை வென்ற ஷபாலி வர்மா தலைமையிலான அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தென்னாப்பிரிக்காவில் 16 அணிகள் பங்கேற்ற முதலாவது மகளிர் டி20 ஜூனியர் (யு19) உலகக் கோப்பையை ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி வாகை சூடி வரலாறு படைத்தது. இதையடுத்து, பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கோப்பையை வென்ற ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்துடன் அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அகமதாபாத் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து மோதும் கடைசி டி20 போட்டியை பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இந்தியா-நியூசிலாந்து மோதும் கடைசி டி20 போட்டி, இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்குவதற்கு முன்பு, ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்றார்.

இதில் பேசிய சச்சின் தெண்டுல்கர், “இந்த அற்புதமான சாதனையைப் படைத்திருக்கும் உங்களை நான் வாழ்த்துகிறேன். இந்த வெற்றியை, இந்திய தேசம் வரும் ஆண்டுகளில் கொண்டாடும். என்னைப் பொறுத்தவரை, என்னுடைய கிரிக்கெட் கனவு 1983ல் தொடங்கியது. ஆனால் இந்த உலகக் கோப்பையை வென்றதன் மூலம், நீங்கள் பல கனவுகளை பெற்றுள்ளீர்கள். இது ஒரு அற்புதமான விஷயம்.

இந்த உலகக் கோப்பையை நீங்கள் வென்றதன் மூலம், இந்தியாவில் உள்ள பெண்களை விளையாட்டில் ஈடுபடவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும், ஊக்குவிக்கவும் வழிகாட்டியுள்ளீர்கள். மகளிர் ஐபிஎல் தொடர், மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை விளையாட்டில் மட்டுமல்லாது அனைத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இறுதியில், வெற்றிபெற்ற இந்திய யு-19 பெண்கள் அணிக்கு ஐந்து கோடி ரூபாய் காசோலையை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com