அறிமுக போட்டியிலேயே யு19 மகளிர் உலகக்கோப்பையை தட்டி தூக்கியது இந்திய அணி!

அறிமுக போட்டியிலேயே யு19 மகளிர் உலகக்கோப்பையை தட்டி தூக்கியது இந்திய அணி!
அறிமுக போட்டியிலேயே யு19 மகளிர் உலகக்கோப்பையை தட்டி தூக்கியது இந்திய அணி!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்று 4 பிரிவாக விளையாடிய இந்த தொடரில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி, சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன் மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இதையடுத்து இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சையில் இறங்கின. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய யு19 மகளிர் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியில், அதன் தொடக்க மற்றும் நடுநிலை பேட்டர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் அந்த ஆணி ஆரம்பம் முதலே சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. தொடக்க பேட்டரில் லிபர்டி ஹீப், கோல்டன் டக் அவுட் ஆனார். மற்றொரு பேட்டரான ஸ்கிரிவென்ஸ் 4 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் மெக் டொனால்டு கேய் மட்டுமே 19 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஸ்டோன் ஹவுஸும், ஷோபிகா ஸ்மேலேவும் தலா 11 ரன்கள் எடுத்தன. அவர்களுக்கு அடுத்தபடியாக ஹோலந்து அதிகபட்சமாக 10 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்றவர்கள் ஒற்றை இலக்க அதுவும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இறுதியில் களமிறங்கிய ஹன்னா பக்கரும் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சாலும் சிறப்பான ஃபீல்டிங்காலும் அந்த அணி, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 68 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் டைட்டஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்சவி சோப்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதில் டைட்டஸ் சாது 4 ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் எளிய இலக்குடன் இந்திய மகளிர் அணியில் கேப்டன் ஷபாலி வர்மாவும், ஸ்வேதா ஷெராவத்தும் களமிறங்கினர். வழக்கம்போல் அதிரடியாய் விளையாண்ட ஷபாலி 11 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உதவியுடன் 15 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். அவருடன் களமிறங்கிய ஷெராவத்தும் 5 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து, அடுத்து களமிறங்கிய செளமியா திவாரியும், கொங்கடி த்ரிஷாவும் பொறுமையுடன் விளையாடினர். அதேநேரத்தில், செளமியா ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கும் விரட்டியபடி இருந்தார். இதனால், இந்திய அணியின் ரன்களும் உயர்ந்தபடி இருந்தது.

இறுதிவரை களத்தில் இருந்த இந்த ஜோடி, வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கொங்கடி த்ரிஷா 24 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் செளமியா திவாரி ஆட்டமிழக்காமல், இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர், 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் 24 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய யு19 மகளிர் அணி, 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் முதல்முறையாக நடைபெற்ற இந்த யு19 மகளிர் உலகக்கோப்பையை கேப்டன் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com