கல்ரா அபார சதம்: ஜூனியர் உலகக் கோப்பையை வென்றது இந்தியா
ஜூனியர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டி அங்குள்ள மவுன்ட் மவுங்குனியில் இன்று நடந்தது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கியது.
ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சி காரணமாக, இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டதால், இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜேசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப் பட்சமாக மெர்லோ 76 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர் பொரேல், நாகர்கோட்டி, ராய், சிவா சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சிவம் மவி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் பிருத்வி ஷாவும் மன் ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தபோது மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்துக்குப் பிறகு போட்டித் தொடர்ந்தது. பிருத்வி ஷா, 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் சதமடித்த, சுப்மன் கில் அடுத்து இறங்கினார். இந்தப் போட்டியிலும் கலக்குவார் என்று எதிர்பாக்கப்பட்ட அவர், 31 ரன்னில் உப்பல் பந்தில் போல்டானார். பின்னர் விக்கெட் கீப்பர் தேசாய் வந்தார். இவர் மெதுவாக ஆட, கல்ரா அடித்து நொறுக்கினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க முயன்ற ஆஸ்திரேலிய கேப்டனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் கல்ரா அபார சதமடித்தார். 102 பந்துகளை சந்தித்த அவர், 3 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 101 ரன் எடுத்தார். தேசாய் 47 ரன்கள் எடுத்தார். பின்னர் 38.5 ஓவரில் 220 ரன் எடுத்து அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று ஜூனியர் உலகக் கோப்பையை கைபற்றியது. இதன் மூலம், இந்த உலகக் கோப்பையை இந்திய அணி, நான்காவது முறையாகக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.