தோனி செய்த ஜிம்னாஸ்டிக்: சமூகவலைதளத்தில் வைரலாகும் படம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி ஸ்டம்பிங்கில் இருந்து தப்பித்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதில், ஆட்டத்தின் 17-வது ஓவரை நியூசிலாந்து அணியின் சண்டெர் வீசினார். இந்த ஓவரில் தோனி பந்தை இறங்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரை கடந்து கீப்பரிடம் சென்றுவிட்டது. அப்போது தனது ஒருகாலை கோட்டிற்கு வெளியேயும், இன்னொரு காலை அகட்டி கோட்டின் நுனியிலும் வைத்தார். இது ஒரு ஜிம்னாஸ்டிக் போல் இருந்தது. நூலிழையில் அவுட் ஆவதில் இருந்து தப்பினார்.
தோனி ஸ்டம்பிங்கில் இருந்து எஸ்கேப் ஆன படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தோனியை பலரும் கிண்டல் செய்து பதிவிட்டனர். மிடில் ஆடரில் களமிறங்கிய தோனி சரியாக ஆடி வெற்றியை நோக்கி கொண்டு செல்லவில்லை, நிறைய பந்துகளை வீணடித்தார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். நீண்ட நாட்களாக தோனி டீமில் இருந்து வருவதாகவும், ஓய்வு பெற இதுவே தருணம் என்றும் கூறினர். அதேபோல் தோனிக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டனர்.