தோனி கோட்டைவிட்ட அந்த கேட்ச் - சென்னை தோல்விக்கு இதுவும்தான் காரணம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஜோஸ் பட்லரின் கேட்சை விட்டது அந்த அணியை தோல்வி அடைய செய்தது.
ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பானதாக இல்லை. அதேபோல் விக்கெட் கீப்பரான தோனி கோட்டைவிட்ட கேட்சும் சென்னை அணிக்கு தோல்விக்கு காரணமாகிவிட்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனி ஆளாக போராடி 95 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தவர் ஜோஸ் பட்லர். அவர் பிராவோ வீசிய 18வது ஓவரில் கொடுத்த கேட்சை தோனி பிடிக்க தவறிவிட்டார். பிராவோவின் பந்தை பட்லர் லெக் சைடில் அடிக்க, அந்தப் பந்து லேசாக பேட்டில் பட்டு பின்னாடி சென்றது. தோனி லெக் சைடில் தாவி பிடிக்க முயன்றார். ஆனால், பிடிக்க முடியாமல் விட்டுவிட்டார். அப்போது, பட்லர் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது பட்லர் விக்கெட் விழுந்திருந்தால் நிச்சயம் ராஜஸ்தான் அணி நிச்சயம் தோல்வியை தழுவி இருக்கும். பட்லர் 65 பந்துகளில் 95 எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்.
தோனி விட்ட கேட்சுக்கு பின்னர் பட்லர் அடித்த அந்த 15 ரன்கள்தான் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, பந்துவீச்சாளர்கள் தான் தோல்வி அடைய செய்துவிட்டனர் என்று கூறினார். ஆனால், சென்னை அணி தோல்வி அடைய தோனியும் ஒரு முக்கிய காரணம் தான் என்பதில் சந்தேகமில்லை.