திருச்சி: தடகள வீராங்கனை தங்க மங்கை தனலட்சுமிக்கு பிரமாண்ட வரவேற்பு

திருச்சி: தடகள வீராங்கனை தங்க மங்கை தனலட்சுமிக்கு பிரமாண்ட வரவேற்பு
திருச்சி: தடகள வீராங்கனை தங்க மங்கை தனலட்சுமிக்கு பிரமாண்ட வரவேற்பு

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தனலட்சுமிக்கு, விளையாட்டு ஆர்வலர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்த இவர் , பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். இந்நிலையில் தேசிய அளவிலான தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாட்டு அணி சார்பாக திருச்சியில் இருந்து தனலட்சுமி உட்பட 20 வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற தனலெட்சுமி தங்க பதக்கமும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 100 மீட்டர் பந்தய தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் வரலாற்று சாதனையையும் முறியடித்துள்ளார்.

இவருக்கும், இவருடன் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும் திருச்சி இரயில் நிலையத்தில் விளையாட்டு ஆர்வலர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். விளையாட்டு வீரர்களுக்கு மாலை அணிவித்தும், மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தனலெட்சுமியின் தாயார் அவரை கட்டிஅணைத்து பாசத்தை, ஆனந்தக் கண்ணீருடன் வெளிப்படுத்தினார். அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் தனலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது எனக்கு பெருமையாக இருக்கிறது. எனது வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என்னோட வெற்றிக்கு முக்கிய காரணமான எனது பயிற்சியாளர் மணிகண்டனுக்கும், எனக்கு துணை நின்ற எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நன்றி.

எனக்கு அரசுப்பணி கிடைத்தால் அது எனக்கு உதவிகரமாக அமையும். எனது பயிற்சியாளருக்கும், எனது குடும்பத்தாருக்கும், எனது நண்பர்களுக்கும், எனக்கு உதவி செய்தவர்களுக்கும், எனது வெற்றியை காணிக்கையாக்குகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com