நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சொன்னார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
போட்டி பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, ’ஆஸ்திரேலிய தொடரில் எப்படி சிறப்பாக விளையாடினோமோ, அப்படியே இந்தப் போட்டியிலும் விளையாடுவோம். கடந்த முறை நியூசிலாந்து அணி இந்தியாவில் விளையாடிய போது அந்த அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், சவாலாக இருந்தார். இப்போதும் அவர் சவாலாக இருப்பார் என நினைக்கிறேன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் மட்டுமல்ல, அந்த அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களுமே சவாலாக இருப்பார்கள். இந்தியாவில் குல்தீப்பும் சாஹலும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். போட்டிக்கிடையே அவர்கள் இருவரும் பிட்சை கணித்து, கருத்துகளை பரிமாறிக்கொண்டு பந்துவீசுகிறார்கள். அவர்கள் அணிக்கு பலமாக இருப்பார்கள். தவான் அணிக்கு திரும்பி இருப்பதால் ரஹானே எந்த இடத்தில் இறக்கப்படுவார் என்று கேட்கிறார்கள். சமீபத்திய போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஒபனிங்கில் இறங்குவாரா அல்லது நான்காவது வீரராக களமிறங்குவாரா என்பது பற்றி கேப்டன் மற்றும் கோச் தான் முடிவு செய்வார்கள்’ என்றார்.