ஈடன் கார்டனில் பறக்குமா தோனி கொடி? சிஎஸ்கே- கொல்கத்தா இன்று மீண்டும் மோதல்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மீண்டும் மோதுகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் வலுவான சென்னை டீம், அடுத்த வெற்றியை எதிர்நோக்கி பாய காத்திருக்கிறது. இதுவரை 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் டாப்பில் இருக்கும் சிஎஸ்கே, புள்ளிப்பட்டியலில் அடுத்த கட்டத்துக்கு நகரும் முயற்சியில் இருக்கிறது.
சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் மிரட்டி வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரராக டுபிளிசில் களமிறங்குவதால் மிடிலில் இறங்குகிறார் ராயுடு. எந்த இடத்தில் இறங்கினாலும் எனக்கு ஒன்றுதான் என்று பந்துகளை விளாசி வருகிறார் அவர். மிடில் ஆர்டரில் கேப்டன் தோனி இறங்கினால், பந்துகள் பறக்கின்றன சிக்சர்களாக. சீனியர் பிராவோ, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்துகிறார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் அதிரடி காட்டிய சாம் பில்லிங்ஸ் கடந்தப் போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். இன்றைய போட்டியிலும் அவருக்கு வாய்ப்பிருக்காது. கடந்த போட்டியில் அணியில் இணைந்திருக்கிற தென்னாப்பிரிக்க வேகம் நிகிடி, தன்னை நிரூபித்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அவர் கொல்கத்தாவுக்கு ரசக்குல்லா கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், ரஸல், சுனில் நரேன், நிதிஷ் ராணா ஆகியோர்தான் அவர்களின் பலம். காயம் காரணமாக ராணா, நேற்று பயிற்சிக்கு வரவில்லை. இன்று அவர் ஆடுவது டவுட். தொடக்க ஆட்டக்காரர்கள் லின் மற்றும் நரேனை பவர்பிளேவில் தூக்கிவிட்டால், கொல்கத்தா ரன் வேகம், பஞ்சரான பஸ்சாகிவிடும் என்பதால் இவர்களின் விக்கெட்டை எடுக்க சிஎஸ்கே முனைப்புக் காட்டும். ராபின் உத்தப்பா, இளம் வீரர் சுப்மான் கில் ஆகிய திறமையான வீரர்கள் அணியில் இருந்தாலும் நிலையான பேட்டிங்கை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சில் ரஸலும் சுனில் நரேனும் மிரட்டி வருகிறார்கள்.
இந்த ஐபிஎல்-லில், 4 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ள கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் நடந்த முந்தைய போட்டியில் கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே-விடம் தோற்றிருந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் கொல்கத்தா அணி, இன்று களமிறங்கும். வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
ஐபிஎல்-லில் இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 முறையும், கொல்கத்தா அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 8 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.