தேசிய அணியில் இருந்து விலகி லீக் போட்டிகளில் ஆட அழைப்பு - இங்கிலாந்து வீரா்களை இழுக்கும் IPL அணிகள்

சா்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரா்களை ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டிகளில் விளையாட வைக்க சில ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் அணுகியுள்ளனா்.
England Players
England PlayersTwitter

கிரிக்கெட் உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஐ.பி.எல். தொடருக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அனைத்து முன்னணி நாடுகளிலும் விதவிதமான பிரீமியர் லீக் டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்களுக்கு தரமான போட்டிகள் கிடைப்பதுடன் அதை நடத்தும் வாரியங்களும் அதில் விளையாடும் வீரர்களும் முன்பைவிட பொருளாதாரத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளனர். சர்வதேச போட்டிகளில் ஆடாமல்கூட டி20 லீக் தொடர்களில் அவர்கள் ஆடும் அளவுக்கு அவற்றின் வளர்ச்சி அமைந்துள்ளன.

கடந்த ஆண்டில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களான ட்ரென்ட் போல்ட், மார்ட்டின் கப்டில் ஆகியோர் லீக் போட்டிகளில் அதிகம் விளையாடுவதற்காக, தேசிய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து தாமாக முன்வந்து விலகியது நினைவிருக்கலாம். இனி வருங்காலங்களில் கிரிக்கெட் வீரர்கள் சிறிது காலம் சர்வதேச போட்டிகள் ஆடிவிட்டு டி20 லீக் போட்டிகளுக்குத் திரும்புவது அதிகமாக நடக்கலாம்.

இந்நிலையில், கிரிக்கெட் உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாக, சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி, ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டிகளில் விளையாடுமாறு இங்கிலாந்தைச் சோ்ந்த 6 சர்வதேச வீரா்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளா்கள் அணுகியிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கவுன்டி அணி நிா்வாகம் ஆகியவற்றிலிருந்து விலகி, தங்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடா்பாக வீரா்களுடன் ஐபிஎல் நிர்வாகம் சார்பில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கால்பந்து விளையாட்டில் உள்ளது போலவே, வீரா்கள் லீக் அணிகளுடன் வருடாந்திர ஒப்பந்த முறையில் விளையாடுவது தொடா்பாக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரா்கள் சங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது. கால்பந்து உலகில் அவ்வாறு ஒப்பந்தத்தில் ஈடுபடும் வீரா்கள் லீக் போட்டிகளில் பிரதானமாக விளையாடுவதும், தேசிய அணிக்காக கிளப்புகளால் விடுவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலத்தில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளா்கள், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மேற்கிந்தியத் தீவுகள் என இதர நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் அணிகளை வாங்கியுள்ளன. தற்போது, ஒரு முக்கிய வீரரை ஒரு அணி ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில், ஆண்டு முழுவதுமாக வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் தனக்குச் சொந்தமான அணியில் அந்த வீரரை களமிறக்க செய்யலாம். இங்கிலாந்து வீரா்களைப் போல, ஆஸ்திரேலிய டி20 வீரா்களும் இவ்வாறு அணுகப்பட்டுள்ளதாகத் 'தி டைம்ஸ்' செய்தி தெரிவிக்கிறது.

தேசிய கிரிக்கெட் அணியில் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரா், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு ஐசிசி அனுமதிக்கிறது. தேசிய, கவுன்டி அணிகளில் இருந்து அந்த வீரா்கள் வெளியேறும் பட்சத்தில், பல லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லாச் சான்று பெற்றால் மட்டும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல் தலைவர் ஹீத் மில்ஸ் கூறுகையில், ''ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள வீரர்களுக்கும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு சில வாரங்களிலேயே வருடாந்திர ஒப்பந்தங்களை விட அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், வீரர்கள் இதுபோன்ற லீக் ஒப்பந்தங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். டி20 லீக் நடக்கையில் வீரர்கள் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட்டையும் விளையாட வேண்டாம் என்று ஒப்புக்கொள்ளும் விதிமுறைகள் இனி உருவாக்கப்படலாம். மேலும் துரதிர்ஷ்டவசமாக இனி இருதரப்பு கிரிக்கெட் தொடர் மீது ரசிகர்களுக்கு பெரியளவில் ஆர்வமிருக்காது என்பது உறுதியாக தெரிகிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com