Top 10 Sports
Top 10 SportsPT

Top 10 Sports: உலக சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா முதல் ரொனால்டோ உடன் இணைய விரும்பும் எம்பாப்பே வரை!

ஒவ்வொரு நாளும் உலகில் ஆயிரம் விஷயங்கள் நடைபெறுகின்றன. அதில் முக்கியமானவையாக சிலதான் இருக்கும். அப்படி விளையாட்டில் Top 10-ல் வரும் முக்கியமான சில செய்திகளை இங்கே பார்ப்போம்.

1. உலக சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 91 ரன்களை அடித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சர்வதேச ரன்களை குவித்த முதல் வீராங்கனையாக உலக சாதனை படைத்துள்ளார்.

5 சதங்கள், 10 அரைசதங்களுடன் ஒரே ஆண்டில் 1,602 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார் ஸ்மிரிதி மந்தனா.

2. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ISL).. சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்திய மும்பை சிட்டி!

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் மும்பை வெற்றிபெற்றது.

மற்றொரு போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை 1-0 கோல்கணக்கில் வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி வெற்றிபெற்றது.

3. அஸ்வினுக்கு இதயப்பூர்வமான கடிதம் எழுதிய பிரதமர்..

ashwin - modi
ashwin - modi

அஸ்வின் ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கும் பிரதமர் மோடி, மற்ற வீரர்கள் அவர்களுடைய கிரிக்கெட் ஷாட்களுக்காக நினைவுகூறப்படுவார்கள்.. ஆனால் நீங்கள் மட்டும்தான் பந்தை அடிக்காமல் விட்டதற்காக நினைவுகூறப்படுவீர்கள்.. உங்கள் ஓய்வுக்கு பிறகு ஜெர்சி எண் 99-ஐ களத்தில் ரசிகர்கள் தவறவிடுவார்கள். நாட்டிற்கான உங்களுடைய சிறந்த அர்ப்பணிப்பு என்னுடைய வாழ்த்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று எழுதியுள்ளார்.

4. பனிச்சறுக்கு உலகக்கோப்பை: 17வது முறையாக கோப்பை வென்ற 21 வயது வீராங்கனை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் பனிச் சறுக்கு உலகக் கோப்பையில் சீனாவைச் சேர்ந்த எய்லீன் கியூ 17ஆவது முறையாக வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார்.

Eileen Gu (CHN) and Alex Ferreira (USA)
Eileen Gu (CHN) and Alex Ferreira (USA)

21 வயதான எய்லீன், உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வாகை சூடியுள்ளார். இதே போன்று, ஆடவர் பிரிவில், அமெரிக்காவில் அலெக்ஸ் ஃபெரய்ரா 10ஆவது வெற்றியை பெற்றார்.

5. யு19 மகளிர் டி20 ஆசியக்கோப்பை வென்ற இந்தியா!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

மலேசியாவில் நடைபெற்று வந்த மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த இந்திய இளம் மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 117 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கோங்காடி திரிஷா 52 ரன்கள் விளாசினார்.

118 என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 76 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜூனியர் மகளிர் ஆசிய சாம்பியனாக உருவெடுத்துள்ளது. இது யு19 மகளிர் ஆசியக்கோப்பை தொடரின் முதல் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

6. புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்திய தபாங் டெல்லி!

11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜெய்ப்பூர் மற்றும் தபாங் டெல்லி இடையிலான போட்டியில் 33-31 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது.

7. இந்தியா சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

2025 ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடர்களில் பங்கேற்கிறது. அதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோ ரூட்டுக்கு ஒருநாள் அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.

8. பெண்களுக்கான ஐ.டி.எப். டென்னிஸ் தொடர்: இந்திய இணை பைனலில் தோல்வி!

இந்தியாவில் (நவி மும்பை) பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரியா பாட்யா, ஜீல் தேசாய் ஜோடி, ஜப்பானின் சடோ, மோரிசகி ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்திய ஜோடி 6-4 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 3-6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' இந்திய ஜோடி 7-10 என நழுவவிட்டது.

ஒரு மணி நேரம், 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், இந்திய ஜோடி 6-4, 3-6, 7-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து, கோப்பை இழந்து இரண்டாவது இடம் பிடித்தது.

9. 97 பந்தில் 201 ரன்கள் அடித்த சமீர் ரிஸ்வி..

2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் கழற்றிவிடப்பட்ட சமீர் ரிஸ்வி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 23 வயதுக்குட்பட்ட ஸ்டேட் ஏ டிராபி போட்டியில் பங்கேற்று அதிராடியாக விளையாடிய சமீர் ரிஸ்வி, திரிபுராவுக்கு எதிராக 97 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 201 ரன்களை விளாசினார்.

10. ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்பும் எம்பாப்பே!

கால்பந்து உலகில் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான கைலியன் எம்பாப்பே, லியோனல் மெஸ்ஸி, நெய்மர் போன்ற தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

லியோனல் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடியதை தன்னால் மறக்கவே முடியாது என கூறியிருக்கும் அவர் ரொனால்டோவுடன் இணைந்து விளையாடுவதற்கான விரும்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை ரொனால்டோவுடன் எம்பாப்வே இணைந்து விளையாடியதில்லை, ஆனால் எதிரெதிர் அணியில் விளையாடியுள்ளார். அவருடன் எதிரணியில் விளையாடியதே பெரும் பாக்கியம், அவர் விளையாட்டின் லெஜண்ட் என்று கூறியுள்ளார் எம்பாப்பே. தற்கால சூப்பர் ஸ்டார் வீரரான எம்பாப்பே ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com