டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரிட்சை; பலம் - பலவீனம் என்ன?
ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், கொல்கத்தா 15 போட்டிகலிலும், பெங்களூரு 12 போட்டிகளிலும் வென்றுள்ளன.
மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 26 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் பஞ்சாப் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அணியை எதிர்கொள்ளவுள்ள பஞ்சாப் அணியின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
பிஷ்னோய், ஹென்ரிக்ஸ் டெல்லிக்கு எதிராக களமிறங்க வாய்ப்பு இமாலய ஸ்கோர். அதிரடி சிக்ஸர் மழை என சீசனில் களமிறங்கிய முதல் போட்டியில் அமர்க்களப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது போட்டியில் சென்னையின் பந்து வீச்சில் சுருண்டது. அணியின் முன் வரிசை வீரர்கள் சிறு பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் கே.எல்.ராகுல், கெய்ல், ஹூடா, மயங்க் அகர்வால் என அணியின் முன்வரிசை வீரர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வல்லமை கொண்டவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் பூரன் அடுத்தடுத்து இரு போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளது அணிக்கு பலவீனமே. இந்நிலையில் அவருக்கு பதில் உலகின் முதல் நிலை டி20 வீரர் டேவிட் மலன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஹாரூக்கான் மத்திய வரிசையில் அணிக்கு அதிரடி அஸ்திரமாக உருவெடுத்துள்ளார். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்தியாவின் death over specialist ஷமியின் அனுபவம் அசுர பலமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பக்க பலமாக கூடுதல் death over specialist ஆக உருவெடுத்துள்ளார் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங். பெருந்தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட ஜை ரிச்சர்ட்ஸன், ரைலி மெரிடித் ஆகியோர் எதிர்பார்த்த அளவு பங்களிப்பைக் கொடுக்காதது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவு. முருகன் அஷ்வினும், மெரிடித்தும் அதிகளவில் ரன்களை விட்டுக் கொடுத்திருப்பதால் இளம் வீரர் ரவி பிஷ்னோய், ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
விளையாடிய இரு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை வசப்படுத்தியுள்ள டெல்லி அணியின் படை பலம் குறித்து பார்க்கலாம்.
சென்னை அணியுடனான போட்டியில் அசத்தலான வெற்றி பெற்ற டெல்லி அணி, ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் முக்கிய தருணங்களில் சுதாரிக்கத் தவறி ஆட்டத்தைக் கோட்டை விட்டது. முதல் போட்டியில் சென்னை பந்துவீச்சாளர்களை பவுண்டரி சிக்ஸர்களால் துவம்சம் செய்த தவன் மற்றும் பிரித்வி ஷா இரண்டாம் போட்டியில் சறுக்கலைச் சந்தித்தனர். விக்கெட்டுகள் சரியும் பட்சத்தில் ஆட்டத்தை நிலைப்படுத்தும் துருப்பாக உதவும் ரஹானேவும் முந்தைய போட்டியில் சோபிக்காதது பின்னடைவு. மத்திய கள வீரரான கேப்டன் பந்த்தின் ஃபார்ம் அணிக்கு பெரும்பலம். ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் இரு போட்டிகளிலும் வெற்றிக்கு வித்திடும் வகையில் அணிக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் மத்திய வரிசையை பலப்படுத்த அவருக்கு பதில் ஹெட்மெய்ர் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அமித் மிஸ்ராவுக்கு பதில் களமிறக்கப்பட்ட லலித் யாதவ் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு வீரர் டாம் கரண் சோபிக்க தவறிய நிலையில் அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது கடினமே. ரபடா ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் யார்கர்களை வீசத் தவறியது அணிக்கு பின்னடைவாக இருந்தது. இருப்பினும் எதிரணியினருக்கு அச்சுறுத்தலான பவுலராகவே அவர் பார்க்கப்படுகிறார். ரபடாவின் வேக இரட்டையராக கூறப்படும் நார்க்கியா, டாம் கரணுக்கு பதிலாக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அனுபவம் மிகுந்த ஸ்டீவ் ஸ்மித் இரு போட்டிகளிலும் களமிறக்கப்படாமல் உள்ளதால் ராஜஸ்தானுக்கு எதிராக அவர் களமிறக்கப்படுவார் என நம்பப்படுகிறது.