'ஒரு காலத்துல இவர பார்த்து பயப்படாதவங்களே இல்ல' - ஷோயப் அக்தரும் சில சுவாரஸ்ய தகவல்களும்!

'ஒரு காலத்துல இவர பார்த்து பயப்படாதவங்களே இல்ல' - ஷோயப் அக்தரும் சில சுவாரஸ்ய தகவல்களும்!
'ஒரு காலத்துல இவர பார்த்து பயப்படாதவங்களே இல்ல' - ஷோயப் அக்தரும் சில சுவாரஸ்ய தகவல்களும்!

உலகின் அதிகவேகமான பந்துவீச்சாளராக அறியப்பட்டவர் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர். ஷோயப் அக்தரின் வேகப் பந்துவீச்சை பார்ப்பதற்காகவே உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது வரலாறு. அதனால்தான் அவரை செல்லமாக ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அனைவரும் அழைத்தனர். 1990 களின் பிற்பகுதியில் தொடங்கி 2000 ஆம் ஆண்டின் முன்பகுதி வரை உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் ஷோயப் அக்தர். அவர் இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷோயப் அக்தர் என்னும் அதிவேக புயல் 

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ல் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி-இல் பிறந்தார் ஷோயப் அக்தர். உலக கிரிக்கெட்டில் ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தை எட்டிய முதல் பந்துவீச்சாளர் சொயப் அக்தர் தான். அவர் இந்த சாதனையை இரண்டு முறை நிகழ்த்தி காட்டி உள்ளார். மேலும் உலகத்தின் அதிவேகமான பந்தை 161.03 கிமீ/மணி வேகத்தில் வீசி இன்று வரை யாராலும் உடைக்க முடியாமல் இருக்கும் சாதனையை நிகழ்த்தியவரும் ஷோயப் அக்தர் தான்.

ஷோயப் அக்தர் தனது முதல் டெஸ்ட் போட்டியை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1997 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தன்னுடைய சொந்த ஊரான ராவல்பிண்டியில் தொடங்கினார். 1999ஆம் வருடம் அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை ஆசியா டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் இந்திய அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் இரண்டு சிறந்த பந்துவீச்சில் இந்தியாவின் ராகுல் டிராவிட் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுலகர் இருவரது விக்கெட்டையும் தட்டி தூக்கினார்.

பின்னர் 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்ற இறக்கங்களை கண்ட அவர் 2005 ஆம் வருடம் பாகிஸ்தானில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த பார்மில் இருந்தார். அந்த தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஒரே இன்னிங்க்ஸ் இல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டாப் ரெக்கார்ட்ஸ் 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த டெஸ்ட் பவுலிங் ரிக்கார்ட் 6விக்கெட்டுகள்/11ரன்கள் ( 6/11 )ஐ கொண்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது சிறந்த ஒருநாள் பவுலிங் ரிக்கார்ட் 6விக்கெட்டுகள்/16ரன்கள் ( 6/16 )ஐ கொண்டுள்ளார்.

கேப்டவுனில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 10வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய 11வது பேட்ஸ்மேன் அடித்த இரண்டாவது அதிகபட்ச ரன்கள் 43 ரன்களை அடித்துள்ளார்.

ஒரு நாள் உலக வரலாற்றில் அதிவேகமான 200 விக்கெட்டுகளை வெறும் 130 போட்டிகளில் அடைந்துள்ளார்.

தனித்துவமான அம்சங்கள் :

  • ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தை எட்டிய முதல் பந்துவீச்சாளர்
  • ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தை இரண்டு முறை எட்டிய முதல் பந்துவீச்சாளர்
  • ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் என்பதை இரண்டு முறை எட்டியுள்ளார்.
  • உலகின் அதிவேகமான பந்துவீச்சு 161.03 கிமீ/மணி என்னும் முறியடிக்கப்படாத சாதனைக்கு சொந்தக்காரர்.
  • அனைத்து விதமான கிரிக்கெட்களிலும் மொத்தமாய் 16 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
  • 46 டெஸ்ட் போட்டிகள், 163 ஒரு நாள் போட்டிகள், 15 டி20 போட்டிகள் விளையாடி உள்ள ஒரே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.
  • அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற ஷோயப் அக்தர் “காண்ட்ரவர்சியலி யுவர்ஸ்” என்ற பெயரில் சுயசரிதை எழுதி இருக்கிறார்.

எப்போதைக்குமான சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷோயப் அக்தரின் பெயர் நிச்சயம் இருக்கும். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற பின்னர் அவர் அவருடைய கிரிக்கெட் திறமையையும் நுணுக்கங்களையும் அனைத்து நாட்டு இளம் விளையாட்டு வீரர்களுக்கும் பகிர்ந்து வருகிறார். மேலும் அனைத்து சர்ச்சைகளையும் மீறி வெற்றி பெற்ற இவருடைய வாழ்க்கை தோல்வியில் துவலும் அனைத்து வீரர்களுக்கும் ஒரு முன்காட்டியாகும்.

11 வருடங்களாக மூட்டு பிரச்சனையை எதிர்கொண்ட ஷோயப் அக்தர், சமீபத்தில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கிறார். மேலும் “ நான் இப்போது மீண்டு வந்து விட்டேன், கொஞ்சம் வலி இருக்கிறது, எனக்கு உங்களுடைய அனைவரின் வாழ்த்துகளும் வேண்டும்” என்னும் வீடியோ ஒன்றை இன்று பகிர்ந்துள்ளார். இந்த அற்புதமான கிரிக்கெட் மேதைக்கு நாம் அவருடைய 47வது பிறந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். 

-வேங்கையன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com