தேசிய சீனியர் கால்பந்து தொடர்: சாம்பியன் பட்டத்தை மீண்டும் தட்டித்தூக்கிய தமிழ்நாடு மகளிர் அணி!

27வது தேசிய சீனியர் கால்பந்து சாம்பயன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தமிழ்நாடு அணி.
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழ்நாடு
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழ்நாடு ட்விட்டர்

27-வது தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மோதின. கடந்த 7 ஆண்டுகளில் இந்திய கால்பந்தில் பலம் வாய்ந்த அணியாக உருவாகி உள்ள தமிழ்நாடு அணி, இந்த ஆண்டு சீனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதியதால் போட்டி தொடங்குவதற்கு முன்பே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழ்நாடு
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழ்நாடு

போட்டி தொடங்கியது முதல் தமிழ்நாடு அணி ஆதிக்கம் செலுத்தினாலும் போட்டியின் 50வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை துர்கா own goal அடித்தது மூலம் ஹரியனா அணி 1-0 என முன்னிலைக்கு சென்றது. அதனை தொடர்ந்து 56வது நிடத்தில் தமிழ்நாடு வீராங்கனை பிரியதர்ஷினி கோல் அடித்து அசத்தினார். பின்னர் 83வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தமிழ்நாடு வீராங்கனை இந்துமதி கோல் அடித்து அசத்தினார்.

இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய தமிழ்நாடு அணி வீராங்கனைகள், 37 கோல்களை அடித்தது மட்டும் இல்லாமல் வெறும் 2 கோல்களை மட்டுமே எதிர் அணிக்கு விட்டு கொடுத்து உள்ளனர். அதேபோல 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தமிழக அணி தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வென்ற நிலையில் தற்போது தமிழ்நாடு அணி மீண்டும் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

2வது முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி ராஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய சாம்பியன் பட்டம் வென்ற கால்பந்து வீராங்கனைகளுக்கு தற்போது வரை அரசு பரிசுத் தொகையை வழங்காமல் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு வெற்றி பெற்ற அணிக்கு ஊக்கதொகையை வழங்கும்போது 2018ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அணிக்கும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வீராங்கனைகளிடம் உள்ளது.

தேசிய மகளிர் கால்பந்தில் தமிழ்நாடு அணி பெற்ற வெற்றி அபாரமான ஒன்று எனக் கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ரகு. தேசிய கால்பந்தில் ஆண்கள் அணி இதுவரை டைட்டில் வெல்லாத நிலையில் தமிழ்நாடு மகளிர் அணி இரண்டாவது முறையாக டைட்டில் வென்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com