அரசுப் பணியிலிருந்து தமிழக கபடி வீரர் அருண் நீக்கம்
தமிழக கபடி வீரர் அருண் அஞ்சலக பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண். கபடி விளையாட்டு வீரரான இவர் இந்திய தபால் துறையின் சென்னை தெற்கு பிரிவிலும் பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்காகவும் விளையாடி வந்தார். இந்நிலையில் அருண் அஞ்சலக பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கபடி போட்டிக்காக தொடர்ச்சியாக அலுவலக பணியிலிருந்து விடுமுறை எடுத்ததே அருண் பணியிலிருந்து நீக்க காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அருணின் பணிநீக்கம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறும்போது, “ஒரு கிராமத்திலிருந்து மேல் எழுந்து வருவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல; அதற்கு நிறைய போராட வேண்டியிருக்கும். நகரத்து இளைஞர்களுக்கு கிடைக்கும் பயிற்சியும் பக்கபலமும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு கிடைக்காது. இதுபோன்ற பணிநீக்க நடவடிக்கைகள் கிராமத்து இளைஞர்களை நிலைகுலைய செய்யுமே தவிர அவர்களை தலைநிமிர வைக்காது என்பதை அரசுத்துறை உணர வேண்டும். அத்துடன் மட்டுமில்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட அருணுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.