இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழக ஹாக்கி அணி
25ஆண்டுகளுக்குப் பிறகு சீனியர் தேசிய ஹாக்கி போட்டியில் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்றுவரும் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தமிழக அணி 6க்கு 5 என்ற கோல்களில் சாய் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மொத்தம் 41 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடந்தது. இதில் எச் பிரிவிலிருந்து அரையிறுதி வரை முன்னேறிய சாய் அணியும் ஜி பிரிவிலிருந்து முன்னேறிய தமிழக அணியும் இன்று மோதியது.
இந்தப் போட்டியின் 9வது நிமிடத்தில் சாய் அணி வீரர் பாபி சிங் தாமி மிக அபார பீல்டு கோல் அடித்து 1க்கு பூஜ்ஜியம் என கணக்கை துவங்கினார். 13வது நிமிடத்தில் தமிழக அணி இதனை சமன் செய்தது. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் தமிழக அணி வீரர் ராயர் மிக அபாரமான பீல்டு கோல் அடித்து 3க்கு 2 என உயர்த்தினார்.
இதற்கு அடுத்த நிமிடத்திலேயே சாய் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ராகுல்குமார் கோலடித்து சமன் செய்தார். அதன்பிறகு 20 நிமிட ஆட்டம் கடுமையான போராட்டமாக இருந்தது. இரு அணிகளில் இருந்தும் மேற்கொண்டு கோல் இல்லாததால் ஷீட்அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. ஷீட்அவுட் முறையில் 3 க்கு 2எனவும் மொத்தத்தில் 6க்கு 5என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.