டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் சிக்சர் சாதனையை சமன் செய்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி யில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில், நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 19 பந்துகளில் 14 ரன் எடுத்து அவுட் ஆனார். அதற்கு முன் தனஞ்செய டி சில்வா வீசிய பந்தில் அவர் மெகா சிக்சர் ஒன்றை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 சிக்சர்களை விளாசிய பெருமையை பெற்றார். இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில், 329 இன்னிங்ஸில் 69 சிக்சர்தான் அடித்திருக்கிறார். அதை சமன் செய்திருக்கிறார் சவுதி. இவர் 89 இன்னிங்ஸில் 69 சிக்சர்களை விளாசியிருக்கிறார். இன்னும் ஒரு சிக்சர் அடித்தால் சச்சினை முந்துவார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில், 107 சிக்சர்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மெக்குலம். அவர் 176 இன்னிங்ஸில் இந்த சிக்சர்களை அடித்துள்ளார். அதற்கடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (100), கிறிஸ் கெய்ல் (98), காலிஸ் (97), ஷேவாக் (91) ஆகி யோர் உள்ளனர்.