
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து கடைசி ஒருநாள் போட்டியையும் வெல்லும் நோக்கில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இலங்கை அணியும் இன்று திருவனந்தபுரத்தில் சந்தித்தன.
அதன்படி, முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணியில் தொடக்க பேட்டர்கள் சிறப்பாய் விளையாண்டனர். கேப்டன் ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் தொடக்க பேட்டராய் களமிறங்கிய சுப்மான் கில்லும் சதமடித்தார். அவர் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், இன்றைய போட்டியில் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலித்த முன்னாள் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம். அத்துடன், இந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். சிக்ஸரிலும் சாதனை புரிந்தார். இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் ரஜிதா மற்றும் லகிரு குமாரா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க பேட்டர்களான இரு பெர்ணாண்டோக்களும் விரைவிலேயே பெவிலியன் திரும்பினர். அவிஸ்கா பெர்ணான்டோ 1 ரன்னில் முகம்மது சிராஜ் பந்துவீச்சில் சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, மற்றொரு வீரரான நுவனிது பெர்ணான்டோ 19 ரன்களில் அதே சிராஜ் பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து குஷல் மெண்டிஸ் (4 ரன்கள்), ஹசரங்கா (1 ரன்) ஆகியோரையும் முகம்மது சிராஜ் வெளியேற்றி அசத்தினார்.
மறுமுனையில் முகம்மது ஷமியும் தனது வேட்டையைத் தொடர்ந்தார். அவர் அசலங்கா (1 ரன்), துனித் வெல்லாஜ் (3 ரன்கள்) ஆகியோரை வெளியேற்றினார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்கள் தொடுத்த தாக்குதலால் இலங்கை அணி, சீட்டுக்கட்டாய் சரிந்து விழுந்தது.
மொத்தத்தில் இலங்கை அணி தரப்பில் எந்த வீரர்களும் நிலைத்து நின்று விளையாடவில்லை. எல்லோரு ஒற்றை இலக்க ரன்களிலேயே மூட்டைக்கட்டத் தொடங்கினர். இதனால், இன்றைய போட்டி, டி20யாய் பிரதிபலித்தது. அதேநேரத்தில், 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணியால் வழக்கம்போல் கடைசி 2 விக்கெட்களை கொஞ்ச நேரம் விளையாட வைத்துத்தான் கழட்டினர். அப்போது இலங்கை அணி, 51 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குப் பிறகு 6 ஓவர்களைச் சந்தித்த இலங்கை அணி 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அதாவது இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் கூடுதலாக 23 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். கடைசி 2 விக்கெட்களை விரைவிலேயே பிரிக்காத நிகழ்வு, முதல் இரண்டு போட்டிகளிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடைசிக்கட்டத்தில் இறங்கி பந்துவீச்சாளர்கள் எடுத்த ரன்களைக்கூட, இலங்கை அணியின் முன்னணி பேட்டர்கள் எடுக்கவில்லை. அவ்வணியின் கேப்டனே 11 ரன்கள்தான் எடுத்திருந்தார். ஆனால் அவரைவிட கசூன் ரஜிதா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அவ்வணி 22 ஓவர்களின் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற முதல் அணி என்ற வரலாற்று பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு அதாவது 15 ஆண்டுகளுக்கு அயர்லாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பெற்ற 290 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான் இதுவரை முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்திய அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
166 ரன்கள் குவித்ததற்காக ஆட்ட நயகன் மற்றும் மூன்று போட்டிகளில் 283 ரன்கள் குவித்ததற்காக தொடர் நாயகன் விருதுகளை விராட் கோலி தட்டிச் சென்றார்.