ஒரே வருடத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 5 கேப்டன்!
இலங்கை கிரிக்கெட் அணியில் ஒரே வருடத்தில் 5 கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த சில வருடங்களாக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மூன்று முறை, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய- இலங்கை மோதும் ஒரு நாள் போட்டித் தொடருக்கு ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘தேர்வாளர்கள் எனக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். நாட்டுக்காக நான் ஆடுகிறேன். அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது என் நோக்கம். இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு. என் கவனம் அதை நோக்கி மட்டுமே இருக்கிறது. மற்ற விஷயங்கள் பற்றி கவலை இல்லை’ என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ’ஆல் ரவுண்டர் மேத்யூஸ் டெஸ்ட் தொடரில் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை. இந்த தொடரில் அவர் பந்தும் வீசுவார். விராட் கோலி, இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேன். நாங்கள் அது பற்றியே நினைத்து கொண்டிருக்கவில்லை. ஆடுகளத்தை சரியாக கணித்து, அதற்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்தினால், இந்திய அணியை வீழ்த்தலாம்’ என்றார்.