“இந்தியா - பாகிஸ்தான் மோதலில் வெற்றி இந்த அணிக்கு தான்!” - ஷஹித் அஃப்ரிடி கருத்து
கிரிக்கெட் உலகில் பரவலான பார்வையாளர்களை பெறுகின்ற போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதி விளையாடுகின்ற போட்டி தான். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற போகும் அணி எது? என்பதை தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷஹித் அஃப்ரிடி. அது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் உடனான பேச்சின் போது இதை அவர் தெரிவித்துள்ளார்.
“அழுத்தம் நிறைந்த இந்த போட்டியில் அதை திறம்பட கையாண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிக்கு தான் வெற்றி. அந்த வகையில் பார்த்தால் இந்தியா இது மாதிரியான அழுத்தங்களை கையாண்டுள்ளது. அதனால் எனது பார்வையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 100 சதவிகிதம் அர்பணிப்புடன் விளையாட வேண்டும். அது இந்தியாவை வீழ்த்த உதவும். முதலில் பாகிஸ்தான் அணி அழுத்தத்தை வெற்றிகரமாக கையாண்டால் தான் இந்தியாவை வெல்ல முடியும்.
இந்த ஆட்டத்தை பாகிஸ்தான் வீரர்கள் அனுபவித்து விளையாட வேண்டும். ஆட்டத்தின் முடிவை குறித்து சிந்திக்க கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.