“ஃபிட்னெஸை நிரூபித்தால் டி20 உலகக் கோப்பையில் நடராஜன் விளையாடுவார்!” - விராட் கோலி
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான தங்கராசு நடராஜன் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வரும் ஐந்தாவது டி20 போட்டியில் தனது ஃபிட்னெஸை நிரூபித்தால், நிச்சயம் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார், இந்திய கேப்டன் விராட் கோலி. இந்தப் போட்டி நடராஜானுக்கு ஒரு பரீட்சை எனவும் அவர் சொல்லியுள்ளார்.
டென்னிஸ் பால் கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு என்ட்ரி கொடுத்தவர் தமிழக வீரர் நடராஜன். பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இல்லை என்றாலும் 2019 - 20 ஐபிஎல் சீசனில் அற்புதமாக தனது திறனை நிரூபித்தவர். ஆஸ்திரேலிய தொடரில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக களமிறங்கி விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். டி20 மட்டுமல்ல மூன்று விதமான போட்டிகளிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.
டி20 உலக கோப்பையில் அவரை இந்தியா பயன்படுத்த வேண்டுமென்ற என எண்ணத்தில் தான் விஜய் ஹசாரே கோப்பையில் அவருக்கு ரெஸ்ட் கொடுத்தது பிசிசிஐ. இந்நிலையில்தான் இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி மற்றும் கோப்பையை யார் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளார் நடராஜன். “இந்த போட்டியில் நடராஜன் தனது பிட்னெஸை நிரூபித்தால் டி20 உலக கோப்பையில் விளையாடுவார். அடுத்து வரும் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் போட்டிகளும் அவருக்கு வைக்கபடும் பலப்பரீட்சை தான்” என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் முறையாக விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

