இந்திய டாப் ஆர்டர்களுக்கு ’டெஸ்ட்’ போட்டி மறந்துவிட்டதா? ஆஸி. கையிலெடுத்த புது வியூகம்!

இந்திய டாப் ஆர்டர்களுக்கு ’டெஸ்ட்’ போட்டி மறந்துவிட்டதா? ஆஸி. கையிலெடுத்த புது வியூகம்!
இந்திய டாப் ஆர்டர்களுக்கு ’டெஸ்ட்’ போட்டி மறந்துவிட்டதா? ஆஸி. கையிலெடுத்த புது வியூகம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கி உள்ளது ஆஸ்திரேலிய அணி.

டி20, டி10, 100 பந்துகள் கொண்ட போட்டி என குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தொடர்கள் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றுவருகின்றன. வர்த்தக ரீதியாக பெரிய அளவில் பணம் ஈட்டுவதற்காகவும், அதிக வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் பலவிதமான புதிய ரூல்கள், விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே உடனடியாக முடிவை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை அதிகரித்து வரும் வேலை பெரிதாக நடந்துவருகிறது.

என்னதான் புதிய வீரர்கள் தங்களுக்கான வாய்ப்பை அடைந்துகொள்ள ஏதுவான வழியாக, டி20 லீக்குகள் பார்க்கப்பட்டாலும், அவை காலப்போக்கில் பணம் ஈட்டும் போட்டிகளாகவும், தொடராகவும் மாறிவருவதை தான் நம்மால் பார்க்க முடிகிறது. தொடர்ந்து டி20 போன்ற குறுகிய வடிவ கிரிக்கெட் லீக்குகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதை பார்க்கும் முன்னாள் வீரர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகிறது என்கிற கவலையை தொடர்ச்சியாக பொதுவெளியில் அறிவித்துகொண்டு தான் இருக்கின்றனர்.

இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது- இயன் போத்தம்

முன்னர் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியிருந்த இங்கிலாந்து வீரர் இயன் போத்தம், “நீங்கள் இப்போது இந்தியாவுக்குச் செல்லுங்களேன், அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எல்லாம் விரும்பி பார்க்கவே மாட்டார்கள். அவர்களுக்கு எல்லாமே இப்போது ஐபிஎல்-ஆக மாறிவிட்டது. அதன்மூலம் அவர்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கிறார்கள். உண்மை தான், ஐபிஎல் இப்போது நன்றாக இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது 100 ஆண்டுகளை கடந்து இங்கே இருந்து வருகிறது. அது எங்கும் ஓடிப்போவதற்கு வாய்ப்பில்லை” என்று கூறியிருந்தார்.

மேலும், ”ஐபிஎல் போட்டிகளில் அதிக வருமானம் கிடைப்பதால் எல்லோரும் அதில் விளையாட விரும்புகிறார்கள். உண்மை தான் ஒரு வருடம் முழுக்க உழைத்து கிடைக்கும் சம்பளம், 2 மாதங்களில் கிடைக்கிறது என்றால் வீரர்கள் அங்கு தான் செல்வார்கள். ஆனால் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டை இழந்தால், மொத்தமாக கிரிக்கெட்டையே இழக்க நேரும் காலம் வந்துவிடும். நாங்கள் திருந்திவிட்டோம், எங்கள் நாட்டில் இன்னும் டெஸ்ட் போட்டிக்கான முக்கியத்துவம் அதிகமாகத்தான் இருந்துவருகிறது. இந்தியாவும் மாறவேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஏன் டாப் ஆர்டர்களால் ரன் குவிக்க முடியவில்லை?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில், சுழற்பந்துவீச்சுக்கு எதிரான ஆடுகளங்களில் விளையாடி பழக்கப்பட்ட, இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களால், ஒரு ஆஃப் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு விளையாடுவதில் தடுமாறுவதை இன்று நம்மால் பார்க்க முடிந்தது. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த டெக்னிக்கை வைத்திருக்கும் வீரர்களும் நிலைத்து நின்று விளையாடாமல் எளிதாக விக்கெட்டுகளை கிஃப்ட் செய்துவிடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக வலது கை பேட்டர்கள் எளிதாக அவுட்டாகிவிட்டு, இடது கை பேட்டர்கள் இங்கு சிறப்பாக விளையாடுவது தான் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.

இதற்கெல்லாம் பெரிய காரணமாக இருப்பது, டெஸ்ட் போட்டிக்கான டெக்னிக்கை முன்னணி வீரர்களும் சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான். அடித்து விளையாடி ரன்னிற்கு செல்லும் முயற்சியில் அவர்களாகவே விக்கெட்டை பரிசளித்து விடுகின்றனர், மற்றபடி ஆடுகளத்தில் எந்த பெரிய பிரச்சனையும் இல்லை என்பதை அக்சர் பட்டேல் இரண்டு விதமான ஆடுகளங்களிலும், சிறப்பான பேட்டிங்க் டெக்னிக்கை வெளிப்படுத்தி நிரூபித்து காட்டியுள்ளார். இந்தியாவின் டாப் ஆர்டர்கள் விரைவாக தங்களது டெஸ்ட் போட்டிக்கான டெக்னிக்கை மீட்டு கொண்டுவர வேண்டும்.

விக்கெட் விழாமல் தடுத்து ஆட வேண்டிய நேரத்தில், அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா!

பொதுவாக இரண்டாவது நாள் முடிவில் எல்லாம், ரன்னிற்கு செல்லாமல் எந்த அணியினராய் இருந்தாலும், விக்கெட்டை இழக்கக்கூடாது என டிபண்ட் செய்யும்விதமாகவே பேட்டிங் செய்வார்கள். ஆனால் இன்றைய இரண்டாவது நாளின் முடிவில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியான அணுகுமுறையை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 2ஆவது நாள் முடிவில் 12 ஓவர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா, 1 விக்கெட் இழப்பில் 61 ரன்களை குவித்து நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளது.

வெற்றிக்காக ஆஸ்திரேலியா போடும் கணக்கு!

அதிரடியான ஆட்டமுறையை ஆஸ்திரேலியா வெளிப்படுத்துவதற்கு காரணம் என்ன என யோசித்தால், ஆடுகளம் போகப்போக சுழற்பந்துவீச்சுக்கு சாதகாமாக மாறும் நிலை என்பது தான். 3ஆவது நாளிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் விக்கெட்டுகளை இழந்தாலும் அவர்களால், 250 ரன்களை எட்டிவிட முடியும். அப்படி எட்டிவிட்டால் இந்தியாவை வீழ்த்துவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருப்பதாக அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்கள்.

இதற்கெல்லாம் மற்றொரு காரணமாக இருப்பது, இந்திய அணியின் டாப் ஆர்டர்களின் சொதப்பல் பேட்டிங் தான். இந்தியாவின் பேட்டர்கள் ஒரு பவுலருக்கு விக்கெட்டை விட்டால் பரவாயில்லை. ஆஸ்திரேலியாவின் 3 சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் இந்தியா விக்கெட்டை பறிகொடுப்பது பெரிய சாதகமாகவே ஆஸ்திரேலியாவுக்கு இருந்துவருகிறது. ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஏதோ ”ஷேன் வார்னே” பந்துவீச்சை எதிர்கொள்வது போல் ஆடுவது, முழுக்க முழுக்க கேலிக்கூத்தாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் டாப் ஆர்டர்கள் மற்றும் மிடில் ஆர்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த போட்டியை இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் காப்பாற்றித்தருகிறார்களோ இல்லையோ, இந்தியாவின் பேட்டர்கள் காப்பாற்றி தரவேண்டிய இடத்தில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com