"அந்த மூவரும் என் ஹீரோக்கள்" - இந்திய வீரர்கள் குறித்துச் சிலாகித்த வங்கதேச வீரர் !

"அந்த மூவரும் என் ஹீரோக்கள்" - இந்திய வீரர்கள் குறித்துச் சிலாகித்த வங்கதேச வீரர் !
"அந்த மூவரும் என் ஹீரோக்கள்" - இந்திய வீரர்கள் குறித்துச் சிலாகித்த வங்கதேச வீரர் !

சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் என்னுடைய ஹீரோக்கள் என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் மனந்திறந்து பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீசில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி அப்போது காலிறுதிப் போட்டிக்குக் கூட தகுதி பெறாமல் தாயகம் திரும்பியது. அந்தப் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, பலவீனமான வங்கதேச அணியிடம் தோற்றது. அந்தப் போட்டியில் தமீம் இக்பால் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடிப்பார். அந்தத் தோல்வியே இந்திய அணி மேற்கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தடுத்தது.

2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நினைவலைகளை தமீம் இக்பால் "ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் " நான் இந்தியாவுக்கு எதிரான 2007 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும்போது சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய முன்னிலையில் அவர்கள் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்." என்றார்

மேலும் தொடர்ந்த தமீம் " 2007 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றி வங்கதேச கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய விஷயம். இது வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை எங்கள் மக்களுக்கு அளித்தது. இந்திய வீரர்கள் முதலில் பேட் செய்து 190 ரன்கள் எடுத்தபோது, எங்களுக்கான வெற்றி வாய்ப்பு இருப்பதாக அறிந்துகொண்டோம்" என்றார்

அந்தப் போட்டியின் பேட்டிங் அனுபவத்தைக் கூறிய தமீம்" நான் பேட்டிங் செய்யச் சென்றேன், ஜாகீர் கானை எதிர்கொண்டேன். 140 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஒரு பந்து வீச்சாளரை என்னால் எதிர்கொள்ள முடியும் என்று நான் நினைத்தேன்.அவர் வீசிய முதல் பந்தைத் தடுத்து ஆடினேன். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினேன். அதிலிருந்து எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை கிடைத்து. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com