ஆர்சிபி கேப்டனாக விராத் கோலியே தொடர்வார்: தலைமை பயிற்சியாளர்

ஆர்சிபி கேப்டனாக விராத் கோலியே தொடர்வார்: தலைமை பயிற்சியாளர்
ஆர்சிபி கேப்டனாக விராத் கோலியே தொடர்வார்: தலைமை பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராத் கோலியே தொடர்வார் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, சைமன் காடிச் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன், நீக்கப்பட்டு, சைமன் காடிச் புதிய தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பந்துவீச்சு பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவும் நீக்கப்பட்டார்.

அதேபோல, பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆர்சிபி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்த சில ஐபிஎல் அணிகளில், கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதே போல ஆர்சிபி அணியின் கேப்டன் விராத் கோலியும் மாற்றப்படுவாரா? என்று பயிற்சியாளர் சைமன் காடிச்சிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கண்டிப்பாக மாற்றப்பட மாட்டார். விராத் கோலிதான் கேப்டனாகத் தொடர்வார் என்று தெரிவித்தார். 

‘அணி குறித்து நடந்த விவாதங்களில் விராத்தை மாற்றுவது குறித்த கேள்வியே எழவில்லை. அவருடன் பணியாற்றுவது குறித்து கேட்கிறார்கள்.அணியின் முன்னேற்றம் பற்றி அவருடன் விவாதித்து வருகிறோம். எங்கள் ஆலோசனைகளை கேட்பதில் அவர் ஆர்வமாக இருக்கிறார்.

கடந்த ஏழு வருடமாக ஆர்சிபி அணியின் கேப்டனாக விராத் இருக்கிறார். அவர் கடந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்றிருப்பார். அவருடன் பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை ’ என்ற அவர், ‘அணியில், முதலில் எந்தெந்த வீரர்கள், எந்த இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், எப்படி பந்துவீசுவார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க இருக்கிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com