எல்லாம் அரசியல்வாதிகள்... கிரிக்கெட் சாதனையாளர்களுக்கு 'நோ'...- மைதானங்களின் பெயர் அரசியல்

எல்லாம் அரசியல்வாதிகள்... கிரிக்கெட் சாதனையாளர்களுக்கு 'நோ'...- மைதானங்களின் பெயர் அரசியல்
எல்லாம் அரசியல்வாதிகள்... கிரிக்கெட் சாதனையாளர்களுக்கு 'நோ'...- மைதானங்களின் பெயர் அரசியல்

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்திற்குள் விராட் கோலி அண்ட் கோ களத்தில் தங்கள் பீல்டிங்கை செட் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த இடம் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இருந்து நரேந்திர மோடி ஸ்டேடியம் என மறுபெயரிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மைதானம் புதுப்பிக்கப்பட்டு 1,10,000 இருக்கைகள் கொண்ட வசதியாக மாற்றப்பட்ட பின்னர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக மாறியது.

புத்தம் புதிய மைதானத்தில் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியாவின் டெஸ்ட் போட்டியே முதல் போட்டியாகும். இந்த நிலையில்தான் சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி ஸ்டேடியம் என மறுபெயரிடப்பட்டுள்ளது. ஒரு மைதானத்துக்கு அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிடுவது இந்திய விளையாட்டில், குறிப்பாக கிரிக்கெட்டில் பல தசாப்தங்களாக இருக்கும் பழமையான நடைமுறைதான். என்றாலும் ஒரு விளையாட்டு வீரரின் பெயர் கூட இதுவரை ஒரு மைதானத்துக்கு பெயராக வைக்கப்படவில்லை. அது ஏன்?

மொடேரா மைதானம் பெயர் மாற்ற காரணம் என்ன?

சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்ட இந்த மைதானம் இப்போது நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று அழைக்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் குறிப்பிட்டார். அதே ஜனாதிபதி அதே உரையில் ``இந்த கிரிக்கெட் மைதானம் பிரதமர் நரேந்திர மோடியால் குஜராத் முதல்வராக இருந்தபோது கருத்துருவாக்கப்பட்டது. அப்போது அவர் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார்" என்று மேற்கோளிட்டு காட்டினார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிடும் வகையிலேயே ஜனாதிபதி அதனை சுட்டிக்காட்டினார்.

அவருக்கு பின்பு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ``கிரிக்கெட் அரங்கம் மோடிஜியின் கனவு திட்டம். நாட்டின் பிரதமரின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளோம். இது மோடிஜியின் கனவுத் திட்டமாகும்" அதையே குறிப்பிட்டார். அதேநேரம் வல்லபாய் படேல் பெயர் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காக மைதானத்தின் விளையாட்டு வளாகத்துக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.

வழக்கமாக தலைவர்கள் இறந்த பின்புதான் அவர்களின் பெயர்கள் அரங்களுக்கு சூட்டப்படுவது வழக்கம். ஆனால், இது கிரிக்கெட்டில் விதிவிலக்கு போல. மும்பையின் பிராபோர்ன் மற்றும் வான்கடே ஸ்டேடியங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் உயிருடன் இருந்த நேரத்தில் அவர்களின் பெயர்களால் சூட்டப்பட்டது. நவி மும்பையின் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியம், பெங்களூரின் எம் சின்னசாமி ஸ்டேடியம், மற்றும் சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் போன்றவற்றிலும் இதே நிலைதான்.

முன்னாள் பி.சி.சி.ஐ மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ராவின் பெயர் அவர் வாழும்போதே மொஹாலி மைதானத்துக்கு வைக்கப்பட்டது. 2015-ல் அது பி.சி.ஏ ஸ்டேடியம் மறுபெயரிடப்பட்டது. இப்படித்தான் இந்திய மைதானங்கள் அரசியல் தலைவர்களின் பெயர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் பெயர்களை தாங்கி நிற்கின்றன. இந்தியாவில் ஏதேனும் கிரிக்கெட் அரங்கங்கள் கிரிக்கெட் வீரர்களின் பெயரில் இருக்கின்றதா என்றால், இல்லை என்பதே நமக்கு கிடைக்கும் விடை.

முதல் தர அல்லது சர்வதேச போட்டிகளை நடத்திய ஒரு கிரிக்கெட் மைதானம் கூட ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரால் பெயரிடப்படவில்லை. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிர்வாகிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் பொது மேலாளர்கள் போன்றோரை பெருமைப்படுத்த அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இரண்டு கிரிக்கெட் அரங்கங்களுக்கு, ஹாக்கி வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவை, குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியம் மற்றும் லக்னோவின் கே டி சிங் பாபு ஸ்டேடியம்.

ஒன்பது அரங்கங்களுக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரிடப்பட்டது. இவற்றில் எட்டு அரங்கங்கள் - புது டெல்லி, சென்னை, கொச்சி, இந்தூர், குவஹாத்தி, மார்காவோ, புனே மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளன. தலா மூன்று அரங்கங்களுக்கு இந்திரா காந்தி (குவஹாத்தி, புது டெல்லி மற்றும் விஜயவாடா) மற்றும் ராஜீவ் காந்தி (ஹைதராபாத், டெஹ்ராடூன் மற்றும் கொச்சி) பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (நடான் மற்றும் லக்னோ) ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மறுபெயரிடப்படுவதற்கு முன்பு வரை இரண்டு இடங்களுக்கு சர்தார் வல்லபாய் படேலின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், மோடி பெயர் மறுபெயரிடப்பட்டதால் வல்லபாய் படேல் பெயர் வால்சாத் மைதானத்துக்கு மட்டும் உள்ளது. இதேபோல் புது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம் 2019 ஆம் ஆண்டில் அருண் ஜெட்லி ஸ்டேடியம் என மறுபெயரிடப்பட்டது.

இரண்டு ஹாக்கி மைதானங்கள் மேஜர் தியான் சந்த் பெயரை பெருமைப்படுத்துகின்றன. இந்தியாவின் முன்னாள் கேப்டன் பைச்சுங் பூட்டியாவின் பெயரில் ஒரு கால்பந்து மைதானம் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் உறுதுணை: The Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com