மிடில் ஆர்டருக்கு போட்டி: ரோகித் சர்மா பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு போட்டி இருப்பது உண்மைதான் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறினார்.
இந்தியா இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். போட்டி பகல் 11.30 மணிக்கு தொடங்கிறது.
இதுபற்றி ரோகித் சர்மா கூறும்போது, ‘ இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பும்ரா சிறப்பாக செயல்பட்டதால் அவர் டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் தன்னை மெருகேற்றி வந்தார் என்பதை மறக்க முடியாது. அவர் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது இளம் வீரர்களுக்கு பாடம். சிறப்பாகச் செயல்பட்டால் அணியில் இடம் பிடிக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் என்னுடன் விளையாடியவர் பும்ரா. அவர் ஒவ்வொரு போட்டியிலும் புதிய திட்டங்களுடன் வந்து பந்துவீசுவார். அணிக்கு எது தேவை என்பதை தெரிந்து பந்துவீசுபவர் அவர்.
ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஆர்டருக்கு போட்டி நிலவுவது உண்மைதான். ஏன் ஆடும் லெவனில் இடம்பிடிக்கவே போட்டிதான். இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.