தடைகளை தகர்த்து தடகளத்தில் சாதிக்கும் மாற்றுத் திறனாளி மனோஜ்
கால்கள் இன்றி தடைகளை தகர்த்தெறிந்த மாற்றுத் திறனாளி இளைஞர் தடகளத்தில் தேசிய அளவில் சாதித்து வருகிறார். உதவிகள் கிடைத்தால் சர்வதேச போட்டியில் பங்கேற்க காத்திருக்கிறார் தடகள வீரர் மனோஜ் குமார்.
சிறு வயதிலேயே இரு கால்களும் செயலற்று போன மாற்றுத் திறனாளியான மனோஜ் குமார், பல தடைகளை கடந்து தடகளத்தில் தேசிய அளவில் சாதித்து வந்த நிலையில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவிக்காக பதக்க வெறியுடன் காத்திருக்கிறார்.
உச்சி வெயிலிலும் தனது லட்சியப் பாதையில் பயணிக்க வேண்டி வெறியுடன் மைதானத்தில் பறந்து வரும் மனோஜ் குமார், தேனியை சொந்த ஊராக கொண்டவர். வேலைக்காக கோவைக்கு வந்த நிலையில், தற்போது ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சிறு வேலைகளை செய்து வசித்து வருகிறார். ஆறு மாத குழந்தை பருவத்திலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர், குடும்ப சூழல் காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி வேலை செய்து வருகிறார். சிறு வயதிலேயே விளையாட்டு துறையில் ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழலால் அதில் பங்கேற்க முடியாமல் இருந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடகள போட்டியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் தனது விளையாட்டு பயணத்தை துவங்கி உள்ளார்.
ஆரம்பத்திலேயே மாவட்ட மற்றும் மாநில அளவில் பதக்கங்களை குவித்து வந்த இவர் , தேசிய அளவிலான தடகள போட்டியிலும் பங்கேற்று பதக்கங்களை தொடர்ந்து குவித்து வருகிறார். இவரின் திறமையை கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரத்யேகமாக தடகளத்தில் பயன்படுத்தும் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனத்தை பரிசாக அளித்து உள்ளனர். அந்த வாகனத்தை வாங்கிய இரண்டு நாளிலேயே தேசிய தடகள போட்டியில் பங்கேற்றத்தில் பல முன்னணி வீரர்களையும் பின்னுக்கு தள்ளி தங்க பதக்கத்தை குவித்து உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறிய விபத்தில் சிக்கியதால் காலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனாலும், மீண்டும் கடந்த மாதம் ஹரியானாவில் நடைபெற்ற தடகளத்தில், 200 மீட்டர் போட்டியில் முதலிடமும், 400, 100மீட்டர் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று தற்போது ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். பல தடைகளை கடந்து தனது தன்னம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையுடன் பயணித்து வரும் இவர் ஆசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு சென்று விளையாடும் அளவிற்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் உதவிகளுக்காக காத்து இருக்கிறார். மற்ற மாநிலங்களில் மாற்று திறனாளிகள் தேசிய அளவில் வெற்றி பெற்றால் பரிசுத் தொகையாக பல லட்சங்கள் வழங்கப்பட்டாலும், தமிழகத்தில் தேசிய அளவில் பங்கேற்க கூட எந்த உதவியும் செய்யாததால் , இனி வரும் காலங்களில் பதக்கங்களை பெரும் வீரர்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார் மனோஜ் குமார்.
தகவல்கள் : சுஜாதா , செய்தியாளர்- கோவை.