’இந்திய வீரர்கள், எங்களை விட திறமையானவங்க’: பாக்.கேப்டன் ஒப்புதல்!
இந்திய வீரர்களின் திறமை எங்களை விட சிறப்பானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.
சூப்பர் 4 சுற்று போட்டி இப்போது நடந்து வருகிறது. துபாயில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிச்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோயிப் மாலிக் 78 ரன்களும் கேப்டன் சர்பிராஸ் அகமது 44 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39.3 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 111 ரன்களும் தவான் 114 ரன்களும் எடுத்தனர்.
தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறும்போது, ‘நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால், 20-30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் கோட்டைவிட்டோம். தொடர்ந்து இதுபோன்று கேட்ச்களை விட்டால் வெற்றி பெறுவது கடினம். நாங்கள் நன்றாக செயல்பட்டும் எப்படி தோற்றோம் என்று தெரியவில்லை. இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்துவீச்சாளர்களிடமும் பேசினோம். ஆனால், ரோகித், தவான் போன்ற வீரர்களை ஆட்டமிழக்க வைக்க முடியவில்லை. அவர்கள் திறமையான வீரர்கள். அவர்களின் ஆட்டத்திறன் எங்களை விட சிறப்பாக இருக்கிறது. அடுத்தப் போட்டி எங்களுக்கு வாழ்வா, சாவா போட்டி. அதனால் அதில் சிறப்பாக செயல் படுவோம்’ என்றார்.