சேப்பாக்கம் போட்டியின்போது மீதமான உணவுகள் சாலையோர மக்களுக்கு தானம்..!
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் போட்டியின்போது, சேப்பாக்கம் மைதானத்தின் உணவகத்தில் மீதமான உணவுகள் தனியார் சேவை நிறுவனத்தின் மூலம் சாலையோரம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும், ஏராளமான ஏழைகள், போதிய உணவின்றி திண்டாடும் நிலை உள்ளது. அதேசமயம், பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுப் பொருட்கள் வீணாகி, குப்பையில் வீசப்படுகின்றன. அந்த அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டு உணவு வீணாக்கப்பட்டு வருகிறது. மேலும் வீணாகும் இத்தகைய உணவுப் பொருட்களை சேகரித்து, தேவைப்படும் ஏழைகளுக்கு விநியோகிக்கலாம் என்ற கருத்தை, பல தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
NO FOOD WASTE என்ற அமைப்பு, பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளில் தயாரிக்கப்பட்டு வீணாகும் உணவுப் பொருட்களை சேகரித்து, ஏழைகளுக்கு விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கும் இந்திய அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மைதானத்தில் உள்ள உணவகத்தில் மீதம் அடைந்த உணவினை இந்த அமைப்பு சேகரித்து பல்வேறு ஏழை எளிய மக்களுக்கும், சாலையோரம் உணவின்றி இருக்கும் மக்களுக்கும் வழங்கினர். கிட்டத்தட்ட 800 நபர்கள் சாப்பிடும் அளவிற்கு உணவு மீந்தது. அதனை சேகரித்து பல்வேறு மக்களுக்கு கொடுத்தனர்.

